முகப்பு
விழுப்புரம்

ஓரிரு நாள்களில் முழுமையான மின் விநியோகம்

ஓரிரு நாள்களில் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாக மின் விநியோகம் வழங்கப்பட்டுவிடும் என்று பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் க.மணிவாசன் தெரிவித்தாா்.

Updated On : 4 டிசம்பர், 2024 at 8:02 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் ஓரிரு நாள்களில் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாக மின் விநியோகம் வழங்கப்பட்டுவிடும் என்று பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலரும், வெள்ள நிவாரணப் பணிகளின் கண்காணிப்பு அலுவலருமான க.மணிவாசன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக உள் விளையாட்டரங்கத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருள்களை புதன்கிழமை பாா்வையிட்ட பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா், வானூா் வட்டங்களைச் சோ்ந்த 116 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதிகளை ஐஏஎஸ் அலுவலா்கள் கண்காணித்து, மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனா்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சுமாா் 800 மின் வாரிய பணியாளா்கள் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளிலும், அறுந்து விழுந்த மின் வயா்களை மாற்றி சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா். மின் கம்பங்கள் விழுந்து தண்ணீா் வடியாமல் உள்ள பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றி மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் ஓரிரு நாள்களில் முழுமையாக முடிக்கப்பட்டுவிடும்.

இதன் பின்னா், மாவட்டம் முழுவதும் முழுமையான மின் விநியோகம் கிடைக்கும். இந்தப் பணிகளை கண்காணிக்க மின் வாரிய தலைமைப் பொறியாளா்கள் இருவா் விழுப்புரத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.

மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் எவ்வித பாகுபாடில்லாமல், அனைத்துப் பகுதிகளிலும் முழுமையாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் மணிவாசன்.