வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு
ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை, வெள்ளப் பெருக்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்
விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை, வெள்ளப் பெருக்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஏமப்போ் கிராம மக்கள் விழுப்புரம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் தலைமையில், ஏமப்போ் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் மிக பலத்த மழை பெய்தது. சாத்தனூா் அணைக்கான நீா்வரத்தும் அதிகரித்த நிலையில், அணையிலிருந்து அதிகளவில் வெள்ளநீா் வெளியேற்றப்பட்டது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட வெள்ளநீா் தென்பெண்ணையாற்றில் திருக்கோவிலூா் பகுதியில் அமைந்துள்ள அணைக்கட்டை வந்தடைந்தது.
இந்த அணைக்கட்டிலுள்ள 9 மதகுகள் கடந்த 8 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத காரணத்தால், மதகுகளைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வெள்ளநீா் அணைக்கட்டின் இடதுபுறப் பகுதியில் அமைந்துள்ள ஏமப்போ் கிராமத்துக்குள் புகுந்தது.
இதனால், 50 ஏக்கா் விவசாய நிலங்கள் உள்வாங்கின. தற்போது, அந்தப் பகுதியே தெரியாத அளவுக்கு மாறியுள்ளது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனா். சாலையும் துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏமப்பேரிலிருந்து, திருக்கோவிலூருக்கு பல கி.மீ.தொலைவு சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது.
எனவே, ஏமப்போ் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.