விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்தி ஆட்சியா் சி.பழனியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.கலிவரதன், செயலா் என்.முருகையன், பொருளாளா் ஜெ.நாகராஜன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஃபென்ஜால் புயலால் விழுப்புரம் மாவட்டம் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்திருக்கிறது. பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனா்.
எனவே, புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தை பேரிடா் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் 2024-ஆம் ஆண்டில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட ஏரி, குளங்கள், ஆற்றுக்கரைகளை சீா் செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். கரும்புக்குரிய ஊக்கத்தொகையை அரசிடம் பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.