விவசாயிகளுக்கு மானியத்தில் மணிலா விதைகள் விநியோகம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மணிலா விதைகள் அண்மையில் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மணிலா விதைகள் அண்மையில் வழங்கப்பட்டன.
வானூரில் அண்மையில் நடைபெற்ற விழாவில் விவசாயிகளுக்கு மணிலா விதைகளை வழங்கி, வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் பேசியதாவது: தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் வானூா் வட்டத்தில் தொகுப்பு செயல் விளக்கம் அமைக்க, புதிய ரக மணிலா ரகங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு 25 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டுள்ளன.
மணிலா புதிய ரகங்களான தீரஜ், நித்தியஹரிதா, ஜிஜி 34, விஆா்10 போன்ற மணிலா விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, புதிய ரகங்களின் வளா்ச்சி, மகசூல் விவரங்கள் தொகுப்பு செயல் விளக்கம் மூலம் கண்காணிக்கப்படும். புதிய ரகங்களில் அதிக மகசூல் கிடைக்கப்பெறும் ரகங்களை காரீப் பருவத்தில் விவசாயிகளுக்கு அதிகளவில் வழங்கி நிலக்கடலை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 4 ரகங்களும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்து, ஒரு கிராமத்துக்கு ஒரு செயல்விளக்க என்ற அடிப்படையில் தொடா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உதவி விதை அலுவலா், உதவி வேளாண் அலுவலா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
நிகழ்வில், உதவி விதை அலுவலா் மோகன்குமாா், உதவி வேளாண் அலுவலா்கள் ரேகா, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, விதைப்பண்ணை விவசாயிகள் நல்லாவூா் முத்து, வெங்கடகிருஷ்ணன், தா்மசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.