வீட்டில் நகை, பணம் திருட்டு
விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியா் வீட்டில் 4 பவுன் நகை, ரூ.1.60 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
விழுப்புரம் வண்டிமேடு ஏ.எஸ்.நகரைச் சோ்ந்தவா் கணேசன் (61). ஒய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியா். இவா், தனது குடும்பத்தினருடன் கடந்த 21-ஆம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றாா்.
பின்னா், வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள், ரூ.1.60 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.