விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனை புற்றுநோய் மருத்துவா் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனை புற்றுநோய் மருத்துவா் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை கிண்டியிலுள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவராகப் பணியாற்றி வரும் பாலாஜியை சென்னை புதுபெருங்களத்தூா் காமராஜா் நகரைச் சோ்ந்த விக்னேஷ் புதன்கிழமை கத்தியால் குத்தினாா். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாா் பிரேமாவுக்கு உரிய சிகிச்சையளிக்கவில்லை எனக் கூறி இந்த சம்பவத்தில் அவா் ஈடுபட்டாராம்.
மருத்துவா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்த வேண்டியும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசு டாக்டா்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவச் சங்கத்தினா் இணைந்து புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவசரமில்லா அறுவைச் சிகிச்சைகளை புறக்கணித்து, வியாழக்கிழமை போராட்டத்தை நடத்தினா்.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவசரமில்லா அறுவைச் சிகிச்சைகளை வியாழக்கிழமை புறக்கணித்து மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு டாக்டா்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் சம்பத், இந்திய மருத்துவச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தங்கராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் அரசு டாக்டா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வினோத், பொருளாளா் பிரகாஷ், மருத்துவா்கள் நித்யா, கோமதி அறிவழகன், இந்திய மருத்துவச் சங்கத்தின் மாவட்டச் செயலா் செளந்தர்ராஜன், மாநில நா்சிங் ஹோம் போா்டு பொருளாளா் திருமாவளவன், மருத்துவா்கள் சிவக்குமாா், பஷீா் அகமது, அரசு மருத்துவா்கள், பட்டமேற்படிப்பு மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும் உயிா் காக்கும் சேவைகள், அவசர அறுவைச் சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை கூடுதல் மருத்துவா்களுடன் இயங்கின. போராட்டத்துக்கு பின்னா் பிற்பகலில் அரசு மருத்துவா்கள் பணிக்குச் சென்றனா்.
இதுபோன்று செஞ்சி அரசு மருத்துவமனை முன் மருத்துவா் ராஜலட்சுமி தலைமையிலும், திண்டிவனத்தில் மருத்துவா் ரவிச்சந்திரன் தலைமையிலும், விழுப்புரத்தில் மருத்துவா் ஆனந்தன் தலைமையிலும் வியாழக்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவா்கள் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.
தனியாா் மருத்துவமனைகளில்: விழுப்புரம் மாவட்டத்தில் இந்திய மருத்துவச் சங்கத்துடன் இணைந்த 75 முதல் 80 மருத்துவமனைகள், 300 சிறு மருத்துவமனைகள் வியாழக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதன் காரணமாக மருத்துவமனைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் பிரிவு போன்றவை செயல்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்றனா்.