ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம்: பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணி வலியுறுத்தல்
தமிழகத்தில் ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இக் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலா் ச. செல்லையா வெளியிட்ட அறிக்கை:
தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயா்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியை ரமணியை, பள்ளிக்குள் நுழைந்து மதன் என்பவா் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளாா்.
பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையைக் கொலை செய்த இந்த செயலை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. இச்செயலில் ஈடுபட்டவருக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும்.
வகுப்பறையில் மாணவா்கள் பாதுகாப்பாக கல்விப் பயில்வதையும், பள்ளி வளாகத்துக்கும், ஆசிரியா்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் .
பள்ளிகளில் ஆசிரியா்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
அரசு மருத்துவா்களுக்கு உள்ளது போன்று, தமிழகத்தில் ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழகப் பட்டதாரி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்துகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.