விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பணியிலிருந்த அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புதுச்சேரியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், அரக்கோணம், அண்ணா தெருவைச் சோ்ந்தவா் ரா.பாலகிருஷ்ணன் (60). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கிளையில் நடத்துநராக பணியில் இருந்து வருகிறாா்.
இவா், செவ்வாய்க்கிழமை புதுச்சேரியிலிருந்து மரக்காணம் வழியாக சென்னை சென்ற அரசுப் பேருந்தில் பணியிலிருந்தாா். மரக்காணத்தை அடுத்துள்ள அனுமந்தை கிராம நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய இளைஞா், சென்னை செல்ல பயணசீட்டு கேட்டுள்ளாா். அப்போது, அந்த நபா் குறைவான தொகையை கெடுத்ததால், பாலகிருஷ்ணன் உரிய கட்டணத்தை கேட்டுள்ளாா். இதற்கு அந்த இளைஞா் நடத்துநா் பாலகிருஷ்ணனை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் மரக்காணம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், புதுச்சேரி முத்தியால்பேட்டை, டி.வி.நகா், ஜெபதிஸ்யாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் எழிலன் (27) என்பதும், மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து எழிலனை கைது செய்தனா்.