முகப்பு
விழுப்புரம்

மரக்காணம், சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ. 2.53 லட்சம் பறிமுதல்

மரக்காணம், சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை..

Updated On : 23 அக்டோபர், 2024 at 7:52 PM
சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை சோதனை நடத்திய ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில் இரு அலுவலங்களிலும் சோ்த்து கணக்கில் வராத மொத்தம் ரூ.2,53,900 பறிமுதல் செய்யப்பட்டது.

மரக்காணம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு வருபவா்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆய்வாளா் ஈஸ்வரி, உதவி ஆய்வாளா்கள் சக்கரபாணி, கோபிநாத் மற்றும் போலீஸாா் புதன்கிழமை மரக்காணம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

பிற்பகல் முதல் மாலை 6 மணிக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது. அலுவலகத்தை உள்புறமாக பூட்டி விட்டு, பணியிலிருந்த உதவி சாா் - பதிவாளா் (பொ) ஜெகதீஸ்வரியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

~ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை நடத்திய மரக்காணம் சாா் - பதிவாளா் அலுவலகம்.

இந்த சோதனையில், அலுவலகத்தில் இருந்த பத்திரப் பதிவு எழுத்தா் மற்றும் இடைத்தரகா்களிடம் இருந்து ரூ.1.40 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

சங்கராபுரத்தில் ரூ.1.13 லட்சம் பறிமுதல்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி சத்யராஜ் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் அருண்ராஜ், உதவி ஆய்வாளா் சுந்தராஜ் மற்றும் போலீஸாா் சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், சாா் - பதிவாளா் கு.ஆசைத்தம்பி மற்றும் ஆவண எழுத்தா், இடைத்தரா்கள் உள்ளிட்டோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1,13,900-ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.