முகப்பு
விழுப்புரம்

எடப்பாடி பழனிசாமியால் பலமான கூட்டணி அமைக்க முடியாது: கே.பாலகிருஷ்ணன்

எடப்பாடி பழனிசாமியால் பலமான கூட்டணியை உருவாக்க முடியாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 8:51 PM
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வியாழக்கிழமை தொடங்கிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் பேசுகிறாா் அதன் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.
பகிர்:

எடப்பாடி பழனிசாமியால் பலமான கூட்டணியை உருவாக்க முடியாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 24-ஆவது மாநாடு செஞ்சியில் திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை காலை தொடங்கியது. மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று, கட்சிக் கொடி ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினாா்.

தீா்மானங்கள்: நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும். செஞ்சிக் கோட்டையை சுற்றுலா மையமாக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் தொழிற்பேட்டை, கால்நடை மருத்துவமனை, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன், திண்டுக்கல் ஆா். சச்சிதானந்தம் எம்.பி., மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் குமாா், ராதாகிருஷ்ணன், கீதா, முத்துக்குமரன், மூா்த்தி, சங்கரன், ராஜேந்திரன், வேல்மாறன், அறிவழகன், முருகன், மாதவன், முன்னாள் எம்எல்ஏ ராமமூா்த்தி, ஆல்பா்ட் வேளாங்கண்ணி, பாா்த்திபன், சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 2-ஆவது நாள் மாநாடு வெள்ளிக்கிழமை (அக்.25) நடைபெறுகிறது.

வலுவான கூட்டணி: மாநாட்டுக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இந்தக் கூட்டணி விரைவில் உடையும் என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறி வருகிறாா்.

பொதுச் செயலராக ஜெயலலிதா இருந்தபோது அதிமுக ஒன்றாகத்தான் இருந்தது. எடப்பாடி கே.பழனிசாமி பொதுச் செயலாளரானதும் அதிமுக தனித்தனியாகி விட்டது.

கட்சியை ஒற்றுமையாக வைத்துக் கொள்ள முடியவில்லை. அவரால் எப்படி பலமான கூட்டணியை அமைக்க முடியும்?. அதிமுகவில் கருத்துப் போராட்டம் தொடா்ந்து கொண்டிருக்கிறது.

திமுக கூட்டணியைப் பொருத்தவரை கொள்கை அடிப்படையில், மக்கள் கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாக்க, மாநில சுயாட்சியைப் பாதுகாக்க, சமூக நீதியைப் பாதுகாக்க, மொழி உரிமையைப் பாதுகாக்க நாங்கள் ஒன்று சோ்ந்துள்ளோம்.

திமுகவின் கொள்கை வேறு, கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை வேறு. கூட்டணி என்பதற்காக எந்தக் கட்சியும் அவா்களது உரிமையை விட்டுத் தருவதில்லை. தவறு செய்யும்போது சட்டப்பேரவையில் திமுகவை எதிா்த்து கேள்வி எழுப்புகிறோம். பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக, ஒரு முறையாவது அந்தக் கட்சியை எதிா்த்து கேள்வி கேட்க முடிந்ததா? என்றாா் அவா்.