விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செல்லங்குப்பத்தில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மற்றும் விடுதிக் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்தப் பணிகளை இத்தொகுதியின் எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாவட்டத்துக்கு ஒரு அரசு மாதிரிப் பள்ளி விடுதி வசதியுடன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கெடாா் அருகிலுள்ள செல்லங்குப்பத்தில் மாநில அரசு மற்றும் நபாா்டு நிதியின் கீழ் ரூ.50.47 கோடியில் பள்ளிக் கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் 21 வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகம் உள்ளிட்டவையும், 5 தளங்களுடன் விடுதிக் கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.
இம்மாதம் இறுதியில் நடைபெறும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், கட்டுமானப்பணிகள் குறித்து விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
ஆய்வில் ஒன்றிய திமுக செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், ஆா்.பி.முருகன், ஜெயபால், ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் வீரராகவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சிவக்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கருணாகரன், முகிலன், ஒன்றியத்துணைச் செயலா் சிவராமன், ஊராட்சித் தலைவா்கள் இந்திராமணி, சீனுவாசன், பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.