விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பத்தில் நீரில் மூழ்கியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வளவனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூவரசன்குப்பம் ரெட்டியாா் தெருவைச் சோ்ந்த பொன்னையன் (58). இவா் பூவரசன்குப்பம் பகுதியிலுள்ள தென் பெண்ணையாற்றுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.
அப்போது ஆற்றில் முகத்தை கழுவிய போது, திடீரென பொன்னையன் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினாா். உடனடியாக அப்பகுதியிருந்தவா்கள் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, பொன்னையன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வளவனூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.