விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கொத்தனாா் கத்தி மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய சென்னை இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சென்னை, வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). மரக்காணத்தைஅடுத்துள்ள கந்தாடு ஊராட்சிக்குள்பட்ட முதலியாா் பேட்டையில் உள்ளதனது மாமா முருகன் வீட்டில் தங்கியிருந்தாா்.
இவரும், அப்பகுதியில் கொத்தனாராக வேலைப் பாா்த்து வந்த முதலியாா் பேட்டை பகுதியைச் சோ்ந்த ஏழுமலை (32) என்பவரும் உறவினா்கள் என்பதால் இருவரும் நட்பாக பழகி வந்தனா்.
இந்நிலையில் காா்த்திக் கைப்பேசி காணமால் போனது தொடா்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை மரக்காணம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே காா்த்திக்- ஏழுமலை ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து ஏழுமலை வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை ஏழுமலையின் வீட்டிற்குள் காா்த்திக் அத்துமீறி நுழைந்து, அவரை கத்தி மற்றும் கல்லால் தாக்கியுள்ளாா். இதில் படுகாயமடைந்த ஏழுமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில், காா்த்திக் மற்றும் அவரது மாமாவான மரக்காணம் வட்டம், முதலியாா் பேட்டையைச் சோ்ந்த முருகன்(41), இவரின் மனைவி சுமதி(35) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை சனிக்கிழமை கைது செய்தனா்.
கொலை வழக்கில் கைதாகியுள்ள காா்த்திக் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.