தீர்க்காயுள் உண்டு
எனக்கு குரு தசை ஆறாவது தசையாக நடந்தது. இதய அறுவை சிகிச்சை நடந்து தேறி விட்டேன். இனி என் உடல் ஆரோக்யம், ஆயுள், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
எனக்கு குரு தசை ஆறாவது தசையாக நடந்தது. இதய அறுவை சிகிச்சை நடந்து தேறி விட்டேன். இனி என் உடல் ஆரோக்யம், ஆயுள், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
வாசகர், புதுக்கோட்டை.
உங்களுக்கு மீன லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், அங்கு அமர்ந்திருக்கும் சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவானையும், ஏழாம் பார்வையாக லக்னத்தையும், ஒன்பதாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் கேது பகவானையும் பார்வை செய்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் மூலத்திரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சந்திர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். சூரிய, சுக்கிர பகவான்கள் இருவரும் விபரீத ராஜ யோகம் பெற்றிருக்கிறார்கள். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார்.
Advertisement
பொதுவாக நான்காம் தசையாக சனி பகவானின் தசையும், ஐந்தாம் தசையாக செவ்வாய் பகவானின் தசையும், ஆறாம் தசையாக குரு மஹா தசையும், ஏழாம் தசையாக ராகு மஹா தசையும் வந்தால் மாரகம் அல்லது துயர் தரும் தசைகள் என்று உள்ளது. இந்த கிரகங்களை செவ்வாய், சனி, ராகு, கேது, சூரிய பகவான்கள் பார்த்தாலும், சேர்ந்தாலும் மாரகத்திற்கு பதிலாக யோகம் ஏற்படும். லக்னாதிபதியும், ஆயுள் ஸ்தானாதிபதியும் மிகுந்த பலம் இழந்து, இந்த மாரக கிரகங்களும் அசுபர் சம்பந்தமின்றி தனித்து நின்றால் தான் மாரகம் செய்கின்றனர். உங்களுக்கு குருபகவான் லக்னாதிபதியாகி லக்னத்தைப் பார்வை செய்கிறார். ஆயுள் ஸ்தானாதிபதி விபரீத ராஜயோகம் பெற்றும், ஆயுள் காரகர் சனி பகவான் ராசியிலும் நவாம்சத்திலும் சுப பலம் பெற்றிருப்பதால் தீர்க்காயுள் உண்டு. அதனால் குரு மஹா தசையில் அறுவை சிகிச்சை முடிந்து நன்றாக தேறி விட்டீர்கள். தற்சமயம் சனி மஹா திசையில் சுயபுத்தி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் நடப்பதால், இந்த காலக் கட்டத்திற்குப் பிறகு மறுபடியும் உங்கள் வாழ்க்கையில் மலர்ச்சி உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.