முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் இருபது வருடங்களாக வளைகுடா நாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக வேலை இல்லை. மறுபடியும் எப்பொழுது அவருக்கு வேலை கிடைக்கும்? தாய் நாடு திரும்பி விடலாமா?

என் மகன் இருபது வருடங்களாக வளைகுடா நாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக வேலை இல்லை. மறுபடியும் எப்பொழுது அவருக்கு வேலை கிடைக்கும்? தாய் நாடு திரும்பி விடலாமா?

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

என் மகன் இருபது வருடங்களாக வளைகுடா நாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக வேலை இல்லை. மறுபடியும் எப்பொழுது அவருக்கு வேலை கிடைக்கும்? தாய் நாடு திரும்பி விடலாமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? கடன் பிரச்னைகள் எப்பொழுது தீரும்? என் பேரனின் எதிர்காலம் எவ்வாறு உள்ளது? 

-வாசகி, ஓசூர். 

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னாதிபதி, சுகாதிபதி புத பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுய சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 
எந்த ஒரு ஜாதகத்திற்கும் லக்னாதிபதியின் அடிப்படை பலம் அவசியம். இது கட்டடத்திற்கு அஸ்திவாரம் போன்றதாகும். அவர் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டிலும் (தன ஸ்தானம்), சுக ஸ்தானத்திற்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிலும் (மற்றொரு தன ஸ்தானம்) பாவாத் பாவ அடிப்படையில் அமர்ந்திருக்கிறார். அதோடு லக்னாதிபதி சந்திர கேந்திரத்திலும் அமர்ந்திருக்கிறார். 
இதனால் பொருளாதார நிலையில் விசேடமான அபிவிருத்தி உண்டாகும். குடும்பத்தில் பிரச்னை என்று ஒன்றும் இராது. பேச்சாற்றல் கூடும். மனதில் நல்ல எண்ணங்கள் துளிர் விடும். அஷ்டவர்க்கத்தில் புத பகவானுக்கு 6 பரல்கள் கிடைக்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லக்னத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
ஐந்தாமதிபதி லக்னத்தில் அமர்ந்திருப்பதால் பூர்வ புண்ணியம் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று கூறவேண்டும். சுக்கிர பகவானுக்கு 5 பரல்கள் கிடைக்கின்றன. 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) விபரீத ராஜயோகம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
மிதுன லக்னத்திற்கு அஷ்டமாதிபத்யம் வந்தாலும் பாக்கியாதிபத்யம் ஏற்படுவதால் சனி பகவான் யோக காரகராகவே கருதப்படுகிறார். அவருக்கு அஷ்டவர்க்கத்தில் 5 பரல்கள் கிடைக்கின்றன. 
விபரீத ராஜயோகம் என்றால் அந்த ஜாதகர் பல விதமான செல்வங்களையும், சுகங்களையும், சுபிட்சங்களையும் அதிர்ஷ்டவசமாக பெறக் கூடியவர் ஆகிவிடுவார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் இரண்டாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். சூரிய பகவானுக்கு அஷ்ட வர்க்கத்தில் 2 பரல்கள் கிடைக்கின்றன.
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்குமதிபதியான செவ்வாய் பகவான், தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். 
செவ்வாய் பகவான் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியான சந்திர பகவான் மேஷ ராசியில் அமர்ந்திருப்பதால் பரிவர்த்தனை உண்டாகி, நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. இது இரண்டாம், பதினொன்றாம் வீட்டுக்கதிபதிகளின் பரிவர்த்தனையாகும். அதோடு இரண்டு தனாதிபதிகளின் பரிவர்த்தனையும் கூட. 
செவ்வாய் பகவானுக்கு அஷ்ட வர்க்கத்தில் ஒரு பரல் கிடைக்கிறது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கதிபதி சந்திர பகவான் லாப ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் நீச்சமடைகிறார். அஷ்ட வர்க்கத்தில் சந்திர பகவானுக்கு 6 பரல்கள் கிடைக்கின்றன. 
களத்திர நட்பு ஸ்தானாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானமான தன் மூலத்திரிகோண வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைந்து, ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், அங்கமர்ந்திருக்கும் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானையும், ஏழாம் பார்வையாக லக்னத்தையும் அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும், ஒன்பதாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். 
குரு பகவானுக்கு ஹம்ச யோகமும் உண்டாகிறது. குருபகவானின் அருளைப் பெற்றவர்களுக்கு தெய்வீக ஞானம், பெரியோர்களின் ஆசி, பொருளாதாரத்தில் உயர்வு, அரசாங்க அனுகூலம், நீதித்துறையில் உயர்பதவி, பெற்றோர்களின் ஆதரவு ஆகியவை சுலபமாகக் கிட்டும். குரு பகவானுக்கு அஷ்ட வர்க்கத்தில் 4 பரல்கள் கிடைக்கின்றன. 
கேது பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு பகவானின் சாரத்தில், வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்தும், ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். 
இத்தகைய வலுவான அமைப்புகள் இருந்தாலும், ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவானுக்கு (கெட்டவனுக்கு பலம் கூடி) நீச்சபங்க ராஜயோகம் உண்டாகி (பொதுவாக "ராஜயோகம்' என்பது நன்மையே கொடுக்கும் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. 
"அசுபக் கிரகத்திற்கு பலம் கூடினால் கெடுதலும் கூடிவிடும்' என்றும் புரிந்து கொள்ள வேண்டும். 
இவர் லக்னாதிபதியை விட பலம் கூடப் பெறுகிறார். செவ்வாய் பகவான் (ஆறாம் வீட்டுக்கதிபதி) ஆத்ம காரகராகவும் (ராசியில் இறுதி பாகையில் இருக்கும் கிரகம்) ஆகிவிடுகிறார். புத பகவான் அமாத்ய காரகராக (ராசியில் இறுதியிலிருந்து இரண்டாம் இடத்தைப் பிடிப்பவர்) ஆகிறார். செவ்வாய் பகவானுக்கு குறைவாக ஒரு பரல் கிடைத்திருப்பது நன்மை தரும் அமைப்பாகும். 
அவருக்கு தற்சமயம் 13.05.2021 இல் இருந்து குரு மஹாதசையில் புத பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதால், இன்னும் 3 மாதங்களுக்குள் நல்ல வேலை கிடைத்துவிடும். தாய்நாடு வரவேண்டிய சூழ்நிலை உண்டாகாது. புத்திர காரகர் குரு பகவான் ஆண் ராசியில் பலமாக இருப்பதால், உங்கள் பேரன் நல்ல நிலையை எட்டி விடுவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments