முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் அமெரிக்காவில் வசிக்கிறான். வாழ்க்கையில் பிரச்னையாகி, அவரும் அவருடைய மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள். எப்பொழுது சரியாகும்...

என் மகன் அமெரிக்காவில் வசிக்கிறான். வாழ்க்கையில் பிரச்னையாகி, அவரும் அவருடைய மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள். எப்பொழுது சரியாகும்... அவர் பணிபுரியும் வேலையிலும் முன்னேற்றமில்லை

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

என் மகன் அமெரிக்காவில் வசிக்கிறான். வாழ்க்கையில் பிரச்னையாகி, அவரும் அவருடைய மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள். எப்பொழுது சரியாகும்... அவர் பணிபுரியும் வேலையிலும் முன்னேற்றமில்லை... பரிகாரம் ஏதாவது உண்டா...
வாசகர், கோவை. 
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் மூன்றாம் பாதம். புத்திசாலித்தனத்திற்கு காரகத்துவம் வகிக்கும் புத பகவான் லக்னம், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியாகி புத பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 
லக்னாதிபதி ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், நட்பு ஆகிய வீடுகளில் இருந்தால் சுப பலம். சம வீட்டில் வீட்டில் இருந்தால் அரை பலம். பகை வீட்டில் சுப பலம் கிடையாது. 
புத பகவான் கும்ப ராசியில் நட்பு வீட்டில் அமர்ந்திருக்கிறார். பொதுவாகவே, புத பலம் பெற்றவர்களுக்கு வாக்கு சாதுர்யம் உண்டு. ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருக்கும் புத பகவான் மற்றவர்களுக்கு கேட்காமலேயே உதவி செய்யும் உதர குணத்தைத் தருவார். பூர்வ, புண்ணிய, புத்திர, புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்), விபரீத ராஜயோகம் (பன்னிரண்டாமதிபதி எட்டாம் வீட்டில் அமர்வதால் ஏற்படுவது), அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு வீடான கும்ப ராசியை அடைகிறார். 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு வீடான ரிஷப ராசியை அடைகிறார். 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் ருணம் (ரோகம்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியான தன் சம வீட்டில் அமர்கிறார். 
நீச்சன் அமர்ந்த வீட்டுக்கதிபதி செவ்வாய் பகவான் சந்திர கேந்திரத்தில் இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் சந்திர பகவான் பெறுகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் அடைகிறார். 
தைரிய ஸ்தானாதிபதி தன் ஆட்சி வீட்டைப் பார்வை செய்து சிறப்பு. ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ராகு பகவானின் சாரத்தில் (சதயம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசி அடைகிறார். கேது பகவான் ஆறாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
ராகு பகவான் ரிஷப ராசியில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அயன, சயன, மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். மிதுன லக்னத்திற்கு குருபகவான் கேந்திராதிபத்திய தோஷம் பாதகாதிபத்ய தோஷம், மாரகாதிபத்ய தோஷம் ஆகிய முப்பெரும் தோஷங்களுக்கு உள்ளாகிறார். 
சுபாப சுப கிரகங்களான குரு, புத, சுக்கிர, சந்திர (வளர்பிறை) பகவான்கள் கேந்திர ராசிகளுக்கு (1, 4, 7, 10) அதிபதிகளாக வந்தால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்பது ஜோதிட விதி. 
இந்த கிரகங்களுடன் அசுபக் கிரகங்கள் இணைந்து இருந்தாலோ, மறைவு ஸ்தானங்களான 3, 6, 8, 12- ஆம் வீடுகளில் இருந்தாலோ, கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடும். 
உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீன லக்னங்களுக்கு ஏழாம் வீடு பாதக ஸ்தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக 2, 7, 11-ஆம் ராசிகள் மாரக ஸ்தானங்கள் ஆகும். இதில் குரு பகவானுக்கு ஏழாம் வீட்டு ஆதிபத்தியம் உண்டாவதால் அவர் மாரகாதிபதி ஆகிறார். அதனால் மிதுன லக்னத்திற்கு குருபகவான் மேற்கூறிய முப்பெரும் தோஷங்களை உடையவர் ஆகிறார். அவருக்கு சுப பலம் ஏற்படாவிட்டால் மண வாழ்க்கையில் குழப்பங்கள் உண்டாகிறது. 
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் மறைவு ஸ்தானங்களில் அதிகம் கெடுதல் செய்யக்கூடிய ஆறாம் வீட்டிற்கும், மிதுன லக்னத்திற்கு மாரகாதிபதியாக கருதப்படும் (பதினொன்றாம் வீட்டுக்குரியவர்) செவ்வாய் பகவானின் தசை நடக்கும். அதற்குப் பிறகு நடக்கத் தொடங்கும் ராகு பகவானின் தசையில் மண வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். 
குருபகவானுக்கு 6 பரல்கள் கிடைக்கின்றன ராகு பகவான் குரு பகவானின் பலத்தைக் கொண்டு தசையை நடத்துவார் என்பதாலும், குருபகவானின் மற்றொரு காரகத்துவமான உத்தியோகமும் மேன்மையடையத் தொடங்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments