பிரபலங்கள் - புத்தகங்கள்

'பிரின்ஸ்லி இம்போஸ்டர்': மனிதன் யார்? -ஆ.இரா. வேங்கடாசலபதி

ஒரு வரலாற்று ஆய்வாளன் ஏன் மொழியிலும் இலக்கியத்திலும் இவ்வளவு ஈடுபாடு காட்ட வேண்டும்? இக்கேள்வியை ஓயாமல்  பல காலமாக எதிர்கொண்டு வருகிறேன்.

ஆர். குழந்தைவடிவேல்

ஒரு வரலாற்று ஆய்வாளன் ஏன் மொழியிலும் இலக்கியத்திலும் இவ்வளவு ஈடுபாடு காட்ட வேண்டும்? இக்கேள்வியை ஓயாமல்  பல காலமாக எதிர்கொண்டு வருகிறேன். சூழலுக்கு ஏற்றாற்போல் ஏதோ ஒரு பதில் நேரடியாகப் பேச்சிலும், நுட்பமாக எழுத்திலும் சொல்ல முயன்றிருக்கிறேன். அண்மையில் படித்த ஒரு நூல் இக்கேள்விக்கான பதிலைப் பல்வேறு தளங்களில் உணர்த்தியிருக்கிறது. ’சாபல்டர்ன் ஸ்டடீஸ்’ ஆய்வுக் குழுவின் பார்த்தா சாட்டர்ஜி எழுதிய A Princely Impostor? என்ற நூல் அது.

கிழக்கு வங்காளத்தில் பவல் என்றொரு ஜமீன். 1909-ல் அதன் இளைய குமாரர் 'பொம்பளைச் சீக்கால்' இறந்து போகிறார். பத்தாண்டுகள் கழித்து ஒரு நாள் ஓர் அரை நிர்வாணப் பூச்சாண்டி ஜமீனுக்கு வருகிறார். குடியானவர்களும் நண்பர்களும் உறவினர்களும் சகோதரிகளும் கூட அந்தப் பக்கிரிதான் இறந்துபோன இளைய குமாரர் என்கிறார்கள். அவருடைய மனைவி அவரை மோசடிப் பேர்வழி என்கிறார். அரசாங்கமும் மனைவியின் கருத்தையே வழிமொழிகிறது. கீழ்க் கோர்ட்டு, மேல் கோர்ட்டு, லண்டன் பிரிவு கவுன்சில் என்று பதினைந்து ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கின்றது. வெள்ளைத் துரைமார், சுதேசிக் கனவான்கள், புதிதாக வளர்ந்து வந்த நவீனத் தொழில்நுட்ப (மருத்துவம், புகைப்படம், கைரேகை) வல்லுநர்கள், குடியானவர்கள் என 2,000 சாட்சிகள். குறுக்கு விசாரணைகளை அச்சிட்டால் 12,000 பக்கங்கள்.

இவ்வளவு ஆதாரங்களையும் கொண்டு, பார்த்தா சாட்டர்ஜி இக்கதையைச் சொல்கிறார். கதை என்றா சொன்னேன்? ஆம். அடிக்குறிப்புகளை மறந்துவிட்டுப் படித்தால் இது கதையும்தான். ஆனால் கதை மட்டுமா?

மனிதர் என்பவர் யார்? உடலா, மனமா, பிரக்ஞையா? அவர் அடையாளம் என்ன? உயிரணுக்கள் இறந்திறந்து பிறக்கும் மனிதர், அதே மனிதர்தாமா? உங்களிடம் இரவல் வாங்கிய கத்தி; உடைந்த அதன் கைப்பிடியை முதலில் மாற்றுகிறேன்; பின்பு முனையையும் மாற்றுகிறேன்; திருப்பித் தரும் போது அது உங்கள் கத்திதானா? இப்படி ஆழ்ந்த தத்துவக் கேள்விகளும் உண்டு.

சுவாரசியமாக விறுவிறுப்பான நடையில் சொல்லப்பட்ட இக்கதையில் அடிநாதமாக இந்தியத் தேசியத்தின் வரலாறும் இழைக்கின்றது. வங்காளத்தில் வலுவாக இருந்த தேசிய இயக்கத்தின் அதிர்வுகள் இவ்வழக்கு நெடுகவும் உண்டு. அரசியல் விடுதலைக்கு முன்பே குடிமைச் சமூகத்தின் நிறுவனங்களில் தேசியத்தின் வெற்றி முன்னுணர்த்தப்படுகின்றனவற்றில் இந்திய தேசியத்தின் (பிற்போக்குக்) கருத்தியல் எல்லைகளையும் ஆசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இலக்கியத்தின் உத்திகளைக் கையாண்டாலும் வரலாறு தனித்ததோர் அறிவுத் துறை. எல்லா எழுத்தும் வெறும் கட்டமைப்பே என்பது ஏற்றுக்கொள்ள இயலாத கூற்று என்றும் ஆசிரியர் நிறுவுகிறார்.

ஆமாம், அந்த அரை நிர்வாணப் பக்கிரி, ஜமீன் குமாரன்தானா? நூலைப் படித்துப் பாருங்கள்; ஒரு வேளை, விடை கிடைத்தாலும் கிடைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani வார ராசிபலன்! | Nov 16 முதல் 22 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தெய்வ தரிசனம்... குழப்பங்களை தீர்க்கும் திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர்!

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

தமிழில் அறிமுகமாகும் காந்தாரா வில்லன்..! 47 வயதில் புதிய தொடக்கம்!

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜுக்கு ‘பூஜ்ஜியம்’!

SCROLL FOR NEXT