வர்த்தகம்

விழாக்காலத்தை முன்னிட்டு பயணிகள் வாகன விற்பனை 11.32% அதிகரிப்பு

DIN

விழாக்காலத்தை முன்னிட்டு பயணிகள் வாகன விற்பனை 11.32 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அபய் ஃபிரோதியா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
உயர்மதிப்பு கரன்ஸி செல்லாதாக்கப்பட்டது, பிஎஸ்-3 தரக் கட்டுப்பாடு விதிமுறைகளிலிருந்து பிஎஸ்-4-க்கு மாறியது, ஜிஎஸ்டி அமலாக்கத்தையொட்டி காணப்பட்ட நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல நிகழ்வுகள் மோட்டார் வாகனத் துறையை பாதிப்பதாக இருந்தாலும் அவற்றிலிருந்து விரைவாக மீண்டு விட்டோம். 
கடந்த ஆண்டிலிருந்து அந்த மந்த நிலை படிப்படியாக மாறி அனைத்து ரக வாகன விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதே நிலை வரும் மாதங்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. 
சென்ற செப்டம்பரில் உள்நாட்டில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 3,09,955-ஆக இருந்தது. கடந்த ஆண்டில் விற்பனையான 2,78,428 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 11.32 சதவீதம் அதிகமாகும்.
அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வாகன விற்பனை செப்டம்பரில் 22,63,620 என்ற எண்ணிக்கையிலிருந்து அதிகரித்து 24,90,034-ஆக இருந்தது.
கார் விற்பனை சென்ற செப்டம்பரில் 1,95,259 என்ற எண்ணிக்கையிலிருந்து 6.86 சதவீதம் அதிகரித்து 2,08,656-ஆனது. பயன்பாட்டு வாகன விற்பனை 26.21 சதவீதம் உயர்ந்து 84,374-ஆனது.
விழாக்காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் பலரும் புதிய வாகனங்களை ஆர்வத்துடன் வாங்கியதையடுத்து பயணிகள் கார் விற்பனை கணிசமான அளவில் அதிகரித்தது.
குறிப்பாக, மாருதி சுஸுகியின் ப்ரெஸ்ஸா, ஹுண்டாயின் கிரெட்டா, மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ, ஃபோர்டின் எக்கோஸ்போர்ட், ஹோண்டாவின் டபிள்யூ ஆர்வி வாகனங்களுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
இருசக்கர வாகன விற்பனை சென்ற செப்டம்பரில் 18,71,621 என்ற எண்ணிக்கையிலிருந்து 9.05 சதவீதம் அதிகரித்து 20,41,024-ஆனது. மோட்டார் சைக்கிள் விற்பனை 6.98 சதவீதம் உயர்ந்து 12,69,612-ஆக இருந்தது.
சாதகமான பருவநிலையை அடுத்து, கிராமப்புறங்களில் மோட்டார் சைக்கிள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
ஸ்கூட்டர் விற்பனையைப் பொருத்தவரையில் சென்ற செப்டம்பரில் 13.19 சதவீதம் வளர்ச்சியடைந்து 6,86,478-ஆக இருந்தது.
வர்த்தக வாகனங்கள் விற்பனை 25.27 சதவீதம் உயர்ந்து 77,195-ஆனது. கடந்த 2011 நவம்பர் மாதம் எட்டப்பட்ட 34.17 சதவீத வளர்ச்சிக்குப் பிறகு தற்போதுதான் வர்த்தக வாகனங்களின் விற்பனை இந்த அளவுக்கு விறுவிறுப்படைந்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT