வர்த்தகம்

ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம் மாற்றமின்றி 1.08 சதவீதமாக நீடிப்பு

DIN

ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம், முந்தைய ஜூலை மாதத்தைப் போலவே மாற்றமின்றி 1.08 சதவீதம் என்ற அளவிலேயே இருந்ததாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் விலை நிலையாக காணப்பட்டதால் சில உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பு நடுநிலையைக் கண்டது. அதன் காரணமாக, அம்மாதத்தில் மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கமானது மாற்றமின்றி 1.08 சதவீதத்திலேயே இருந்தது.
இது, நடப்பாண்டு ஜூலையில் அதே 1.08 சதவீதமாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் 4.62 சதவீதமாகவும் காணப்பட்டன.
நடப்பாண்டு ஜூலையில் 6.15 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7.67 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு,  புரதச் சத்துகள் நிறைந்த பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலை அதிகரிப்பே முக்கிய காரணம்.
கடந்த ஜூலையில் காய்கறிகளின் விலை 10.67 சதவீதம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஆகஸ்டில் இது 13.07 சதவீதமாக மேலும் உயர்ந்தது. 
அதேபோன்று, புரதச்சத்து அதிகமுள்ள முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றுக்கான விலையும் 3.16 சதவீதத்திலிருந்து 6.60 சதவீதமாக அதிகரித்தது. இருப்பினும், எரிபொருள்களின் விலை ஜூலையில் 3.64 சதவீதம் குறைந்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இது 4 சதவீதமாக காணப்பட்டது.
மேலும், உற்பத்தி பொருள்களுக்கான பணவீக்கம் ஆகஸ்டில் பூஜ்யம் சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. இது, ஜூலையில் 0.34 சதவீதமாக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கையை நிர்ணயிப்பதில் நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கத்தை முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொண்டாலும், மொத்த விலை பணவீக்கமும் குறைந்துள்ளது வட்டிக் குறைப்புக்கு மேலும் சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT