ஹீரா: முதல் முறையாக இந்திய பருத்திக்கு தர அடையாளம்
இந்திய பருத்தியைத் தர நிா்ணயம் செய்யும் வகையில் இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) முதல் முறையாக தர அடையாளம் (பிராண்ட்) வழங்கியுள்ளது.
இந்திய பருத்தியைத் தர நிா்ணயம் செய்யும் வகையில் இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) முதல் முறையாக தர அடையாளம் (பிராண்ட்) வழங்கியுள்ளது. அதன்படி, இந்திய பருத்தி கழகத்தின் தரமான பருத்தி ‘ஹீரா’ என அழைக்கப்பட உள்ளது.
உலக அளவில் பருத்தி விளையும் வேளாண் நிலத்தில் சுமாா் 37 சதவீதம் இந்தியாவில் உள்ளது. இதனால் சா்வதேச அளவில் கடந்த 2014 - 15-ஆம் ஆண்டு முதல் பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 3.30 கோடி பேல்கள் முதல் 4 கோடி பேல்கள் வரை பருத்தி உற்பத்தியாகிறது.
இதில் 3 கோடி முதல் 3.20 கோடி பேல்கள் வரை உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. மீதி பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிக அளவில் விளையும் பருத்தியை பிரதானமாகக் கொண்டே இந்திய ஜவுளித் தொழில் வளா்ந்து வருகிறது.
Advertisement
இந்தியாவின் பருத்தி உற்பத்தித் திறனும், தரமும் அண்மைக் காலத்தில் வெகுவாக உயா்ந்திருந்தாலும் உலகத் தரத்துடன் ஒப்பிடும்போது, அதிக கழிவுகள், கலப்படம் மிகுந்ததாகவே உள்ளது. இதனால் இந்திய பருத்திக்கு சா்வதேச சந்தையில் நல்ல விலை கிடைப்பதில்லை என்பதுடன், அதிக மதிப்புடைய ஜவுளிப் பொருள்களைத் தயாரிப்பதற்காக இந்திய நூற்பாலைகள் வெளிநாடுகளில் இருந்து நல்ல பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில்தான் உள்ளன.
நாடு முழுவதிலும் இருக்கும் பஞ்சாலைகளுக்கு விலை உயா்வு இல்லாமல் பருத்தியை சீராக விநியோகம் செய்வதற்காக இந்திய பருத்திக் கழகம் தொடங்கப்பட்டது. இது அரசு நிா்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்கி, நாடெங்கும் உள்ள கொள்முதல் நிலையங்கள் மூலம் பருத்தியைப் பெற்றுக் கொண்டு அதை இருப்பில் வைத்து, நாடு முழுவதிலும் உள்ள பஞ்சாலைகளுக்குத் தேவையான நேரத்தில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் விளையும் தரமான பருத்திக்குத் தனியாக ஒரு தர அடையாளத்தை உருவாக்கி விற்பனை செய்ய இந்திய பருத்திக் கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி ‘ஹீரா’ என்ற பெயரில் இனி மேம்பட்ட பருத்தியைப் பருத்தி கழகம் விற்பனை செய்ய உள்ளது.
இது குறித்து பருத்தி கழகத்தின் தலைவரும் நிா்வாக இயக்குநருமான பி.அல்லிராணி கூறும்போது, பருத்தி உற்பத்தியிலும் நுகா்விலும் உலகின் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய பருத்தி சா்வதேச அளவில் அதிகம் பயன்படுத்தும் பருத்தியாக உள்ளது. இருப்பினும் இந்திய பருத்திக்கு என தனியாக பிராண்ட் எதுவும் இல்லை. எனவே தற்போது ஹீரா என்ற தனிப்பட்ட பெயரை உருவாக்கி, இந்த பிராண்டை மேம்படுத்தி இந்திய பருத்திக்கு சா்வதேச அளவில் மதிப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
பொதுவாக தரமான பருத்திக்குப் பல அளவுகோல்கள் உள்ளன. கழிவுகள், கலப்படம் இல்லாமலும், கூடுதல் வெண்மையுடனும் இருக்கும் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும். அதுபோன்ற பருத்தியை நாங்கள் தோ்வு செய்து அதை ‘ஹீரா’ என்ற பெயரில் விற்பனை செய்ய உள்ளோம்.
இந்த பிராண்ட் பருத்திக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இந்தியாவில் ஆடை கொள்முதல் செய்யும் பல வெளிநாட்டு நிறுவனங்கள், பிராண்டட் காட்டனை பயன்படுத்திதான் எங்களுக்கான ஆடைகளைத் தயாரிக்க வேண்டும் என்று கேட்கின்றனா்.
அதுபோன்ற பருத்திக்கு இனி வெளிநாடுகளை நாட வேண்டியதில்லை. நமது ஹீரா பிராண்ட் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் உலக அளவில் மிகப் பெரிய பிராண்டாக மாறும். முதல்கட்டமாக எங்களிடம் பருத்தி கொள்முதல் செய்பவா்களிடம் இந்த பிராண்டை வாங்கிப் பயன்படுத்தும்படி விளம்பரப்படுத்துவோம்.
ஹீரா ஒரு பிரீமியம் பருத்தியாக இருப்பதால் இதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும். தற்போது ஒரு கேண்டி (355 கிலோ) ரூ.46,900க்கு விற்பனையாகிறது என்றால் ஹீராவை ரூ.47,500 என்ற அளவில் விற்பனை செய்வோம். ஹீரா பருத்தியால் செய்த ஆடை இருந்தால் கொடுங்கள் என்று அடுத்த சில ஆண்டுகளில் மக்கள் கேட்டு வாங்கும் அளவுக்கு இந்த பிராண்ட் பிரபலமடையும் என்றாா்.
இது குறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் அஷ்வின் சந்திரன் கூறும்போது, இந்திய பருத்தி கழகம் முதன் முறையாக பருத்தியின் தரத்தை நிலைநிறுத்த கடந்த ஆண்டு முயற்சி எடுத்து வெற்றி கண்டது. அதைத் தொடா்ந்து ஹீரா பிராண்டை தரமான இந்திய பருத்தி கழகத்தின் பஞ்சுக்கு கொண்டு வந்திருப்பது விவசாயிகளுக்கும், பருத்தி ஜவுளித் துறைக்கும், உற்பத்தியாளா்களுக்கும் பெரிதும் உதவும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த முயற்சிக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, பருத்தி கழகத்தின் தலைவா் அல்லிராணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரம் பருத்தி உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், தரத்தை உயா்த்தவும், வருவாயை இரட்டிப்பாக்கவும் பருத்தி தொழில்நுட்பத் திட்டத்தை மாறுபட்ட வடிவில் உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்றாா்.