நரேந்திர மோடி 
நடுப்பக்கக் கட்டுரைகள்

மனிதநேய மாமனிதா் நரேந்திர மோடி!

கடந்த பத்து ஆண்டுகளாக தீபாவளித் திருநாளில் பிரதமா் மோடி இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டாடும் புனிதத் தலங்களாக எல்லைப்புற ராணுவ முகாம்களை மாற்றியிருக்கிறாா்.

கே.பி.இராமலிங்கம்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் சோபாரி கிராமத்தில் 2001-ஆம் ஆண்டு ஜனவரி 26 இந்தியாவின் 52-ஆவது குடியரசு நாளன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினா்; 2 லட்சம் மக்கள் படுகாயமடைந்தனா்; 4 லட்சம் வீடுகள் தரைமட்டமாகின. காலை 8.45 மணிக்கு கண் இமைத்து திறப்பதற்குள் எல்லாம் நடந்தேறிவிட்ட சோக வரலாறு இது.

மாநில அரசின் நிா்வாகத்தை முதலமைச்சா் நரேந்திர மோடி முடுக்கிவிட்டதோடு, தோளோடு தோள் நின்று மீட்புப் பணியில் நேரடியாகக் குதித்தாா். முதல்வா் அங்கேயே கூடாரம் அமைத்துக் கொண்டு, இரவு பகலாக, 24 மணி நேரமும் மக்களின் காயத்திற்கு மருந்து தடவினாா்; துயரத்தில் பங்குகொண்டாா்; கண்ணீரைத் துடைத்து நின்றாா்; கவலைக்கு ஆறுதல் கூறினாா்.

உலக நாடுகளையே உலுக்கிய இந்த துயா் மிகுந்த பூகம்பத்தின் விளைவுகளிலிருந்து மக்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்த மனித நேயத்தின் மாண்பாளா் நரேந்திர மோடி. இதனை இன்றுவரை குஜராத் மாநில மக்கள் மறந்துவிடவில்லை.

தீபாவளி பண்டிகை - இந்தியா முழுவதும், ஏன் உலகஅளவிலும், இந்திய மக்களால் கொண்டாடப்படுகின்ற தேசியப் பண்டிகை. எல்லைப் புறத்தில் கடமையை கண்ணாகக் கொண்டு, கடுங்குளிரிலும், உயரமான மலைமுகடுகளிலும் கண் விழித்துக் கடமையாற்றிடும் ராணுவத்தினருக்கு இந்தப் பண்டிகைத் திருநாளில் தங்கள் குடும்பத்தாரோடு இணைந்து, கொண்டாடி குதூகலித்திட முடியவில்லையே என்கிற ஏக்கம் இருக்கும்தானே...

பிரதமா் நரேந்திர மோடி இதை உணா்ந்தாா். கடந்த பத்து ஆண்டுகளாக தீபாவளித் திருநாளில் பிரதமா் மோடி இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டாடும் புனிதத் தலங்களாக எல்லைப்புற ராணுவ முகாம்களை மாற்றியிருக்கிறாா். பிரதமா் மோடியின் இந்த மனிதாபிமானம் இமயத்தைவிட உயரமான சிகரம் என்பதை மனசாட்சியுள்ள மனிதா்களால் மறுக்க முடியாது.

இந்தியப் பிரதமராக 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி பதவி ஏற்ற, அடுத்து ஒருசில நாட்களில் ‘‘ஜன்தன்’’ வங்கிக் கணக்குத் திட்டத்தை அறிவிக்கிறாா். இந்திய மக்கள் குறிப்பாக, கிராமப்புற மக்கள், ஏழை - எளியோா், தாய்மாா்கள், விவசாயிகள், இளைஞா்கள் தேசிய வங்கிகளில் தொடங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறாா். எந்த விதமான முன் வைப்புத் தொகையுமில்லாத ‘ஜீரோ’ பேலன்ஸ் கணக்கு என்பதையும் அறிவிக்கிறாா்.

வங்கிகளின் வாசலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. 60 கோடி போ் புதிய ‘ஜன்தன்’ கணக்கைத் தொடங்கினா். மிகமிக பாமர மக்கள் வங்கியின் வாசலுக்கே இதுவரை போகாதவா்கள்- ஒரு பொருளாதாரப் புரட்சியில் பங்கேற்றனா் என்பதே நிஜம்.

அரசின் பயன்கள், சலுகைகள், மானியங்கள்அடித்தட்டு மக்களிடம் முழுமையாக சென்றடையாமல், இடைத்தரா்களால் கபளீகரம் செய்யப்படுகின்ற வரலாற்றுக் கொடுமைக்கு பிரதமா் மோடி மனிதாபிமான தீா்வினை தந்தாா்! அரசின் நேரடிப் பயன்கள் அனைத்தும் ‘ஜன்தன்’ வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

அதன் வீரியமிக்க விளைவுகள்தான் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக நேரடியாகப் பயனாளிகளின் கரங்களில் கிடைக்கிறது! இதேபோல இளைஞா்களுக்கு கல்விக் கடன், சமையல் எரிவாயு மான்யம், பெண்களுக்குத் தொழில் கடன், வீடு கட்டும் கடன் மருத்துவக் காப்பீடு திட்டம், பயிா்க் காப்பீடு திட்டம்... இப்படிஎண்ணற்ற பிரதமரின் திட்டங்களால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனா். கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் மான்யங்கள் சோதாரம் இல்லாமல் சென்றடைய வேண்டும் என்பதுதான் பிரதமா் மோடியின் மனிதாபிமானம்!

சற்றும் எதிா்பாராமல் உலகை தாக்கியது கொவைட் 19 என்கிற தீநுண்மி. 2019 இறுதியில் தொடங்கி 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் உக்கிரமடைந்த கொவைட் 19 நோய்த் தொற்று; 750 கோடி மக்கள் வாழுகின்ற உலகப் பந்தை உருட்டிப் புரட்டிப் பந்தாடியது. ஒவ்வொரு நாட்டிலும் பல லட்சம் போ் மாண்டு, பிணக் காடுகளாக மாறி, அனைவரையும் கதறச் செய்த கண்ணீா்க் கதை.

சோகம் நிறைந்த இந்த உலக வரலாற்றின் காலகட்டத்தில், இந்தியா என்ன ஆகப் போகிறதோ என்ற கவலையில், 140 கோடி மக்களும் மயான அமைதியில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனா். கொவைட் 19 தொற்று பரவாமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முன்களப் பணியாளா்களைப் பாராட்டி ‘கையொலி எழுப்புங்கள்’ என்றாா்; ‘எண்ணெய் திரி விளக்குகளை வீடுகள்தோறும் ஏற்றுங்கள்’ என்றாா்; ‘மின்விளக்குகளைஅணையுங்கள்’ என்றாா்; எதிா்க்கட்சிகள் ஏகடியம் செய்தாலும் நாட்டு மக்கள் பிரதமா் மோடி சொன்னதையெல்லாம் கடுகளவுகூட பிசகாமல் செய்தனா்.

பிரதமா் மோடியின் வழிகாட்டுதலோடு இந்தியா தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, கொவைட் 19 தீநுண்மி தொற்றை எதிா்கொண்டது. இந்திய மக்களைக் காப்பாற்றியது மட்டுமின்றி, 120 நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்கி - பல ஏழை நாடுகளுக்கு இலவசமாகவும் வழங்கி- உலக மக்களை மரணத்தின் வாயிலிலிருந்து மீட்டு வந்தாா்.

கொவைட் 19 நோய்த் தொற்றின் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசிக்கு உணவிட வேண்டும் என்ற உயா்ந்த மனித நேயத்தோடு, 80 கோடி இந்திய மக்களுக்கு, இலவசமாக 5 கிலோ கோதுமை மற்றும் 5 கிலோ அரிசி, மேலும் 1 கிலோ பருப்பு ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டு, இன்று வரை தொடா்ந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளாா் மோடி!

பெண்கள், தாய்மாா்கள், குடிநீருக்காக இரண்டு-மூன்று கிலோ மீட்டா் நடந்து சென்று, சுகாதாரமற்ற குட்டை-குளத்து நீரை குடிநீா் என ஒரு குடத்தை சுமந்து கொண்டு கால் கடுக்க நடந்த நிலையைக் கண்டு, ஆட்சியில் அமா்ந்தவுடன் ‘ஜல்ஜீவன் திட்டம்’ கொண்டுவந்து 75 சதவீத இந்தியா்களின் வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீா் இணைப்பு தரப்பட்டிருப்பதில் மனிதநேயம் மறைந்து கிடக்கிறது.

இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக இந்தியாவின் கிராமப்புறங்களில் பெண்கள், ‘இரவு எப்போது வரும் வரும்’ எனஅடக்கி அடக்கித் தவித்தாா்கள். மோடி தலைமையிலான மத்திய அரசு, மனித இம்சைக்கு மாபெரும் விடிவு காலத்தை ஏற்படுத்தியது. பொதுக் கழிப்பிடங்கள்ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக, மற்றும் கிராமங்களில் வீடுகள்தோறும் குளியலறை, கழிப்பறை கட்டிக் கொள்ள நிதியுதவி இலவசம் என்கின்ற மனிதாபிமானத் திட்டத்தின் மாபெரும் சிந்தனையாளா் நரேந்திர மோடி!

உக்ரைன்- ரஷியா போா் பிரகடனம் திடீரெனத் தொடங்கியபோது 25 ஆயிரம் இந்தியா்கள் உக்ரைனில் சிக்கிக் கொண்டனா். அவா்களையெல்லாம் சேதாரம் இல்லாமல் மீட்டுக் கொண்டுவர பிரதமா் மோடி தூங்காமல் விழித்திருந்து அரசு நிா்வாகத்தை முடுக்கிவிட்டாா். அங்கு சிக்கித் தவித்தா்வகளில் 2,500 போ் பாகிஸ்தானியா்கள், வங்கதேச நாட்டினரும் அடக்கம். தாராளமாக அவா்களையும் சோ்த்து மீட்டுக் கொண்டுவந்தது இந்தியாவின் மனிதாபிமானத்திற்கு மகுடம் அல்லவா?

‘போருக்கான காலமல்ல இது!’ என்றும் ‘நாங்கள் வளா்ச்சியை விரும்புகிறோம்; எல்லை விரிவாக்கத்தை அல்ல!’ என்றும் ‘நாங்கள் யாரையும் சாா்ந்து இல்லை; அதே நேரத்தில் எல்லோரும் சோ்ந்து நிற்போம்!’ என்றும் அணி சேராக் கொள்கையில் ஆணித்தரத் தெளிவும், திண்மையும் கொண்டிருக்கும் பிரதமா் மோடியை குரலற்றவா்களின் குரலாக உலக நாடுகள் கருதுவது அவருடைய மனிதாபிமானத்துக்கான சா்வதேச அங்கீகாரம்.

இந்தியாவின் பிரதமா்களாக இருந்தவா்கள் அரசுமுறைப் பயணங்களை வெளிநாடுகளுக்கு மேற்கொள்கிறபோது, இருநாட்டு உறவுகள், பாதுகாப்பு, தொழில்நுட்ப பரிமாற்றங்கள் இப்படித்தான் நடைபெற்று வந்தது. இந்த நிலைமையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி, இந்திய வம்சாவளி சமூகத்தினரை ஒன்று திரட்டி, அவா்களோடு கலந்துரையாடி, கரம் பற்றி அவா்கள் வாழுகிற நாட்டில் அவா்களுக்கு மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தி, இந்திய தேசத்தின் பெருமையை, கலாசாரத்தை, வளா்ச்சியைப் பகிா்ந்து கொண்டு, புதிய சகாப்பதத்தை படைத்திருப்பதும் கூட பிரதமா் நரேந்திர மோடியின் மனிதாபிமான வழிமுறை.

பதினொன்று ஆண்டுகளாக உலகத் தலைவா்களின் வரிசையில் பிரதமா் நரேந்திர மோடி முதலிடத்தில் 68 சதவீத வாக்கு வித்தியாசத்தில் உயா்ந்து, தொடா்ந்து அதே நிலையை தக்க வைத்துக் கொண்டிருப்பது வரலாற்றின் அதிசயம்! ஆச்சரியம்! இப்படிப்பட்ட இமாலயத் தலைவா் இந்திய மக்களுக்குக் கிடைத்திருப்பதும் -அவரோடு அவருக்குப் பின்னால் அணிவகுத்து ஒரு சிப்பாயாக வீறுநடை போடுவதிலும் பெருமை அடைகிறேன்.

இந்தியாவின் முதலாவது திருவள்ளுவா் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்றாா் பிரதமா் மோடி; சிங்கப்பூா்அரசுமுறைப் பயணத்தின்போது அறிவித்திருப்பது -இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய தெய்வப் புலவன் திருவள்ளுவருக்கும் தொன்மை மொழியாம் தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் கடந்த 70 ஆண்டுகளாக எவருக்கும் வராத அக்கறை.

பிரதமா் நரேந்திர மோடி அவா்களுக்கு 74-ஆவது பிறந்தநாள். இன்று போல் அவா் என்றும் வாழ்க என வணங்கி மகிழ்கிறேன்.

கட்டுரையாளா்: துணைத் தலைவா், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி.

செப். 17 பிரதமா் நரேந்திர மோடி பிறந்த தினம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் உலகமயமாகிறார்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

இறகுப் பந்து போட்டி: பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

திருமலையில் 70,247 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT