இந்திய சமூகம் ஐரோப்பிய நாடுகளைப் போன்றதல்ல. இது முற்றும் முழுவதுமாக சமூகம் சார்ந்தது. இதன் சமூகக் குழுக்கள் ஒவ்வொன்றும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்டது. இதை அறிந்துதான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், இந்திய சமூகத்தின் இயங்கியல் மையப் புள்ளி சமூக நீதி என்றார்.
ஆனால், இதை நிறைவேற்றுவதில்தான் பிரச்னைகள் வந்து விடுகின்றன. அரசமைப்புச் சட்டம் தந்த உறுதி மொழிகளால், அதை நிறைவேற்றித் தர முடியவில்லை. ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சட்ட பிரச்னைகளையும், சமூக மோதல்களையும் சந்திக்கும் அபாயத்தை தந்து விடுகிறது. சமூக நீதியை சரியாகப் புரிந்து கொள்வதில்தான் அடிப்படையான சிக்கல் இருக்கிறது.
முதலில் சமூக நீதியை சலுகை என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. உரிமை என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சமூகம் தந்த கொடுமையை அதே சமூகத்துக்கு சரி செய்து கொடுக்கும் உயர் கடமையாகக் கருத வேண்டும். இந்த சமூக நீதியில் மற்றும் ஒரு சமூக நீதி வேண்டும் என்ற குரல் எழுந்துவிடக் கூடாது. பாதிப்புக்கு ஏற்ப வழங்கப்படும் சமூக நீதியைத்தான், சம நீதி என்கிறோம். இன்றைய சமூக நீதியில் சம நீதி இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதில் அரசு இயந்திரம் எந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது என்பதை வெளிப்படையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
எந்த தேசத்தின் வளர்ச்சியையும், மக்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அதிலும் மக்களை ஒன்றுபடுத்தாமல் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த முடியாது. இதற்கு ஒற்றுமைதான் அவசியம் என்றால், அதற்கான முன்நிபந்தனை சமூக நீதியாக மட்டுமே இருக்க முடியும். நீதியற்ற சமூகத்தில் எவ்வாறு மனபூர்வமாக மக்கள் ஒருங்கிணைவார்கள். மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமை இல்லாமல் ஒற்றுமையும் சாத்தியமில்லை; வளர்ச்சியும் சாத்தியமில்லை.
பிரிட்டிஷ் கடலோடிகளால் இந்திய அரசர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி கொள்வது மிகவும் சுலபமாக இருந்தது. காடுகள், மலைகள், கடற்கரை பெரும் மணல் பரப்பு என்ற பிரிந்து கிடந்து, சமூகம் சமூகமாக வாழ்ந்து வந்த இனக் குழுக்களை இவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. இவர்களது துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அவர்களிடம் செல்லுபடியாகவில்லை. அந்த பிரதேசங்களுக்கு சென்ற அந்நியர்கள் திரும்பி வரவும் இல்லை.
இதை முறியடிக்க ஒரு சட்டத்தை பிரிட்டிஷார் கொண்டுவந்தார்கள். குற்றப் பரம்பரை சட்டம் என்று அதற்குப் பெயரும் வைத்தார்கள். அதில் காலப் பெருவெளியின் துயரம் சுமந்த மற்றொரு நடைமுறையும் இணைந்து கொண்டது. அதுதான் கைரேகை சட்டம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் காவல் நிலையத்துக்குச் சென்று குற்றப் பரம்பரை என்று கைரேகை வைக்க மாட்டேன் என்பதற்கு தன் கையை துண்டித்துக் கொண்ட வீர வரலாற்றை பொதுவெளி இன்றும் அறிந்திருக்கவில்லை. இன்றைய மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் இது நடந்துள்ளது. இதில் பெருங்காமநல்லூரில் வீரப் போராட்டம் நடத்தி மரணமடைந்த 16 பேர் விவரம் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது. மேலதிக விவரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்பதை ஆய்வாளர்கள் வேதனையோடு குறிப்பிடுகிறார்கள்.
பிரிட்டிஷாரை எதிர்த்து நின்ற வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வேலு நாச்சியார், கோபால் நாயக்கர், மருது சகோதரர்களைப் பற்றிய போராட்டங்களின் வரலாறு நமக்குத் தெரிகிறது. இவர்களைத் தூக்கிலிட்டால் மற்ற சமூகங்கள் அச்சம் கொண்டு விடும் என்று பிரிட்டிஷார் கணக்குப் போட்டிருந்தனர்.
இந்த மண் தந்த வீரர்கள் மரணத்தைப் பார்த்து பயப்பட மாட்டார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம், உடுமலை வட்டத்தில் அமைந்த தளி பாளையப்பட்டின் வீரம் செறிந்த பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கர்.
பிரிட்டிஷாரால் அனுப்பப்பட்ட தூதுவன், வரி கொடுக்க வேண்டும் என்ற அதிகாரத்தை சுமந்து வந்து, அதை ஆணவத்துடன் தெரிவிக்கிறான். என்ன நடக்கும் என்று தெரிந்தும் அவனுக்கு தூக்குத் தண்டனைக்கு உத்தரவிடுகிறார் எத்தலப்ப நாயக்கர். பாளையத்தின் கோட்டை பீரங்கிப் படையால் அழிக்கப்படுகிறது. அவரும் தூக்கிலிடப்படுகிறார். எஞ்சியவர்களும் போராடி மாண்டு போகிறார்கள்; எத்தனை பேர் என்ற தகவல் மட்டும் கிடைக்கவில்லை.
பிரிட்டிஷாரை எதிர்த்து உறுதி கொண்ட சமூகங்கள் அனைத்தும் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவில் செவ்விந்தியர்களைக் கொன்று குவித்ததைப் போல, ஆஸ்திரேலியாவில் நடந்ததைப் போல இங்கு பெருங்கொலைகள் நடந்தன. இதில் வரலாற்றில் புதைக்கப்பட்ட "செம்மணி' படுகொலைகள் எத்தனையோ இருக்கின்றன. அந்தக் காலத்திலேயே மூடிமறைக்கப்பட்டது போக, எஞ்சிய சில வெளியுலகுக்கு தெரிய வந்தன.
சில பொறுப்புள்ள ஊடகங்கள் மூலமாகவும் கிறிஸ்தவ பாதிரியார்களின் ஆவணங்கள் மூலமும், இந்த மானுட விரோதக் கொலைகள், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்குச் சென்றன. அங்கும் குற்றப் பரம்பரை குறித்த விவாதங்கள் நடந்து சில வழிகாட்டுதல்கள் தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, நாடு விடுதலை அடைந்த பின்னர் 1958}ஆம் ஆண்டில் முற்றாக குற்றப் பரம்பரை ஒழிக்கப்பட்டு "டிஎன்டி' சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்தப் பேரழிவைச் சந்தித்த வீரஞ்செறிந்த 68 இனக் குழுகளின் வழித்தோன்றல்கள் தமிழ் பேசும் நிலமெங்கும் இன்றும் வாழ்கிறார்கள். இவர்கள்தான் குற்றப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட குற்றப் பரம்பரை என்று கூறப்படுகிறது. குற்றப் பரம்பரையை ஒரு ஜாதிக்குள் நிறுத்த முடியாது. சமூகங்களாகப் பார்க்க வேண்டும்.
ஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் பல சமூகங்கள் ஒருங்கிணைந்து நின்றதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஜாதிக்கும், சமூக இனக் குழுக்களுக்கும் இடையில் அமைந்த வேறுபாடுகள் இதில் முக்கியமானவை. சமூகத்தில் விழிப்புணர்வை உருவாக்கி சமூக நல்லிணக்கத்தின் மூலம் மாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு பெரும் முயற்சி கடந்த காலத்தில் சமூகங்களின் வழியாக நிகழ்ந்துள்ளது. அது இன்று தேர்தல் ஆதாயங்களின் பயன்பாடாக மாற்றப்பட்டு விட்டது. இன்றைய ஜாதிகளின் எதிர்மறைச் செயல்பாடுகள் குறித்து நாம் ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது.
நூறாண்டு காலமாக பயன்பட்டு வந்த இந்த "டிஎன்டி' சட்டம் என்பது 1979}ஆம் ஆண்டில் "டிஎன்சி' என்ற மாற்றப்பட்டுள்ளது. சீர்மரபு பழங்குடி (டிரைப்ஸ்) என்பதற்கும், சீர்மரபு சமூகம் (கம்யூனிட்டி) என்பதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. சீர்மரபு பழங்குடி என்பதை சீர் மரபு சமூகம் என்று மாற்றம் செய்ததில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பலரது வாய்ப்புகள் பறிக்கப்பட்டு விட்டன. தமிழக அரசு இதில் இரண்டு வழிகாட்டுதல்களைத் தருகிறது. மாநில அரசு பழங்குடி சீரமரபினர் என்றும், மத்திய அரசு சீர்மரபு பழங்குடி என்றும் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்கிறது.
இன்றைய அடிப்படையான பிரச்னை ஒரு சமூகத்துக்கு இரண்டு சான்றிதழ் ஏன் என்பதுதான்?. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் சீர்மரபு இனம் (டிஎன்சி) என்ற வகைப்பாடு இல்லை; இங்கு மட்டும் ஏன் என்ற கேள்விக்கு சரியான விடை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.
சமூக நீதி என்பது கல்வி இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு மட்டுமல்ல. சமூகங்கள் தொழில் சமூகங்களாக மாறுவதற்கு மத்திய அரசிடமிருந்து பெறும் நிதிகளும் இதில் அடங்கும். இதில் முதல் சங்கடமே ஜாதி சான்றிதழில் தொடங்கி விடுகிறது.
இதைப் போலவே, மற்றொரு பிரச்னையும் முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 29 நாடோடி சமூகங்கள் இருக்கின்றன. இந்தப் பழங்குடியினர் பெயர் எந்தப் பட்டியலிலும் இல்லை என்கிறார்கள். இவர்களின் பெயர்களை புள்ளிவிவரக் கணக்கில் அவர்கள் விருப்பத்தைக் கேட்காமலேயே பல்வேறு பட்டியலில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நாடோடி பழங்குடியினர் சீர்மரபு பழங்குடியினர் பட்டியலில் முழுமையாக இடம் பெற்று, பயன்பாட்டைப் பெற்று வருகின்றனர். இதற்கான தீர்வையும் உடனடியாகச் செய்ய வேண்டியது அவசியமாகும்.
ஜனநாயகத்தில் குடிமக்கள் அதிகாரம் பற்றி யாருமே கவலை கொள்வதில்லை. குடிமக்களின் விருப்பத்தை அரசு ஆராய்ந்து அதை நிறைவேற்றுவது அரசின் கடமை. சீர்மரபு பழங்குடி பட்டியலில் இருந்த மக்களில் யாருமே தங்களை சீர்மரபு சமூகமாக மாற்ற வேண்டும் கோரிக்கை வைக்கவில்லை. என்ன நடந்தது என்பது அந்த மக்களுக்கு இன்னமும் தெரியவில்லை.
அதில் விழிப்புணர்வு கொண்ட சமூகங்கள் தங்களைக் காலதாமதமின்றி இரட்டைச் சான்றிதழ் இல்லாமல் சீர்மரபு பழங்குடி என்னும் ஒரே சான்றிதழை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதிலுள்ள சம நீதியை கட்டாயம் தமிழ்நாடு அரசு உணரும் என்று கருதுகிறேன்.
கட்டுரையாளர்:
மூத்த தலைவர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.