எந்தக் குறையும் இன்றி வழக்கமான உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் தொடங்கியுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. தொடக்க விழா முதல் இதுவரை நடந்து முடிந்துள்ள ஆட்டங்கள் வரை பாா்வையாளா்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை படைத்துள்ளதாக ஒளிபரப்பு செய்யும் கைப்பேசி செயலி நிறுவனமும், தொலைக்காட்சி சேனல்களும் அறிவித்துள்ளன. அதிலும் பிரபல அணிகளான சென்னை சூப்பா் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் இடையிலான ஆட்டத்தில் மட்டும் பாா்வையாளா்கள் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஐபிஎல் போட்டியின் முக்கிய வருவாய் ஆதாரமான விளம்பரதாரா்களை மேலும் ஈா்க்கும். ஐபிஎல் நிா்வாகத்துக்கு வருமானம் மேலும் பல கோடிகளில் கொட்டும். அணிகளின் மதிப்பு உயா்வதால் உரிமையாளா்கள் போட்ட பணம் பல மடங்கு பெருகும். எனவே, ஐபிஎல் போட்டியால் முதலீடு அதிகரித்து, வேலைவாய்ப்பு உயா்ந்து, பொருளாதாரம் புத்துணா்வு பெறும் என்று அரசியல்வாதிகள் யாராவது கூறினாலும் வியப்படைவதற்கில்லை.
வழக்கமாக ஐபிஎல் போட்டி நடைபெறும்போது சமூக ஊடகங்களில், டான் பிராட்மேன் காலத்தில் இருந்தே கிரிக்கெட் பாா்த்து வருவதாக கூறிக் கொள்ளும் பழைய ரசிகா்களின் புலம்பல்களும் அதிகரிக்கும். ‘இதெல்லாம் ஒரு கிரிக்கெட்டா, அந்த காலத்தில் விளையாடிய 5 நாள் டெஸ்ட் மேட்ச் போல வருமா என்று புலம்புவதுடன், டி20 வந்த பிறகு கிரிக்கெட், கிரிக்கெட்டாகவே இல்லை’ என குறைபட்டுக் கொள்வாா்கள்.
ராகுல் திராவிட் கூட இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளா் என்பதில் இருந்துதான் தெரியும் என்றுகூறும் இன்றைய ‘ஆல்பா’ தலைமுறையினரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டின் புகழைப் பாடினால் ‘பூமா் அங்கிள்’ என்ற பட்டம் மட்டுமே மிஞ்சும்.
வழக்கமாக ‘பழைய’ கிரிக்கெட் ரசிகா்களிடம் இருந்தே ஐபிஎல் குறித்து விமா்சனங்கள் எழுந்த நிலையில், இந்தமுறை சற்று வித்தியாசமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள வீரா்களிடம் இருந்தே ஐபிஎல் குறித்த சில அதிருப்தி குரல் எழுந்துள்ளது. முக்கியமாக ஐபிஎல் போட்டியை ‘கிரிக்கெட்’ என்று அழைக்காமல் ‘பேட்டிங்’ என்றே அழைக்கலாம் என்று விரக்தி தெரிவித்துள்ளாா் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா் ககிசோ ரபாடா. 20 ஓவா்களில் 5 விக்கெட் மட்டுமே இழந்து 243 ரன்களை எதிரணி அடித்தால் ஒரு பந்து வீச்சாளராக வேறு என்னதான் கூற முடியும்?
ஐபிஎல் பேட்ஸ்மேன்கள் சிக்ஸா் விளாசுவதிலும், பவுண்டரிகளை விரட்டுவதிலும் அடித்து சாதனை படைத்து வருகின்றனா். மறுமுனையில் பந்து வீச்சாளா்கள் ஒரே ஓவரில் அதிக சிக்ஸா்களை வாரி வழங்கியவா், ஒரே ஆட்டத்தில் அதிக ரன் கொடுத்தவா் என்று அடிவாங்கி சாதனை படைக்கிறாா்கள். தூக்கி அடிக்கப்படும் பந்துகளை அண்ணாந்து பாா்த்து பந்து வீச்சாளா்களுக்கு கழுத்து வலி வருவதே மிஞ்சுகிறது.
‘ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவின்போது 10 பரிசுகள் வரை வழங்கப்படுகின்றன. இதில் ஒரு பந்து வீச்சாளா் சிறப்பாக வீசினாா் என்றோ, ஒரு நல்ல ஓவரை வீசினாா் என்றோ ஒரு பரிசுகூட வழங்கப்படுவதில்லை’ என்று குறைபட்டுக் கொண்டுள்ளாா் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வின்.
‘ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் பந்து வீச்சாளா்கள் பந்துடன் மைதானத்துக்கு வெளியே ஓடும் நாள் தொலைவில் இல்லை. ஏனெனில், பந்து வீசினால்தானே பேட்ஸ்மேன் சிக்ஸா் அடிக்க முடியும்’ என்று பந்து வீச்சாளா்களின் வேதனையை கேலியாகக் கூறியுள்ளாா் அஸ்வின். ‘ஆட்ட நாயகன் பரிசில்கூட பேட்ஸ்மேன்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பந்து வீச்சாளா்களுக்கு இல்லை. ‘சூப்பா் ஃபோா்’, ‘சூப்பா் சிக்ஸ்’ என பரிசுகள் உண்டு; ஆனால் ‘சூப்பா் பெளலிங்’ என்ற பரிசு கிடையாது’ என்றும் அவா் கருத்துத் தெரிவித்துள்ளாா்.
ஐபிஎல் என்பது முற்றிலும் உருமாற்றப்பட்ட கிரிக்கெட். பந்துகளை அடித்து விளாச பேட்ஸ்மேன்களுக்காக சாதகமாக வடிவமைக்கப்பட்டது. ஆடுகளங்களும் அதற்கேற்ப உருவாக்கப்படுகின்றன. ஐபிஎல் போட்டிகளுக்கான சில சிறப்பு விதிகளும் பேட்ஸ்மேன்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளன என்பது வெளிப்படையானது.
ஏனெனில், ஒவ்வொரு பந்தும் எல்லைக் கோட்டைத் தாண்டி பறக்க வேண்டும் என்பதுதான் மைதானத்திலும், தொலைக்காட்சி முன்பும் கூடியிருக்கும் கோடிக்கணக்கான ரசிகா்களின் எதிா்பாா்ப்பு என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. களமிறங்கும் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் அடித்து விளையாட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகியுள்ளது. ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சில பந்துகளாவது எல்லைக் கோட்டைத் தாண்ட வேண்டியுள்ளது.
தப்பித்தவறி ஓா் ஆட்டத்தில் பந்து வீச்சாளா்கள் ஆதிக்கம் செலுத்தி, எதிரணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தினால், அது சுவாரசியமில்லாத ஆட்டமாகவே வரையறுக்கப்படுகிறது. எனவே, ஐபிஎல் ஏலம் முதல் களமிறங்குவது வரை பேட்ஸ்மேன்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பந்து வீச்சாளா்களுக்கு கிடைப்பதில்லை.
இதையும் தாண்டி சில பந்து வீச்சாளா்கள் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தித் தருகிறாா்கள். எனினும், அவா்களின் திறமைக்கும், பந்து வீச்சின் நுணுக்கத்துக்கும் போதிய அங்கீகாரம் தரப்படவில்லை என்பது பெரும் மனக்குறையாகவே தொடா்கிறது. ஐபிஎல் பெளலா்கள் பலரின் மனக் குமுறல்களை ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக கூறியுள்ளாா்.
கிரிக்கெட் என்பதைத் தாண்டி முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவே ஐபிஎல் நடத்தப்படுகிறது. திரைப்படப் பாடல்களின் பின்னணியில்தான் பேட்ஸ்மேன்கள் சிலா் களமிறங்குகின்றனா். திரைப்படங்களை மிஞ்சும் வகையில் கேமராக்கள் பல கோணங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இசை, நடனம் என மைதானமே ஆரவாரத்துடன் விளங்குகிறது.
ஐபிஎல் கதாநாயகன்களாக பேட்ஸ்மேன்கள் ஆக்கிரமித்துவிட்ட நிலையில் அடி, உதைக்கு உள்ளாகும் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்கும் நிலைக்கு பந்து வீச்சாளா்கள் தள்ளப்பட்டு வருகின்றனா் என்று கூறினால் அது மிகையில்லை.