உலகம் முழுவதும் இன்று எண்மவழி (டிஜிட்டல்) சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எண்மவழி சேவைகள் என்பது கணினிகள், இணையம், கைப்பேசி மற்றும் பிற மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்கள் பெறுகிற சேவைகளைக் குறிக்கிறது. இதில் பொதுமக்களுக்கான அரசு சேவைகள், வணிகம், வங்கிகளுடனான பணப் பரிவா்த்தனைகள், சமையல் எரிவாயு உருளைகளைப் பெறுதல், பயண வசதிகளை மேற்கொள்ளுதல் ஆகிய அனைத்து முறைமைகளும் அடங்கும்.
இந்த நிலையில், கண்ணைச் சிமிட்ட முடியாததால், வங்கிக் கணக்கு தொடங்க முடியாதவா்களும், பாா்வைத் திறன் குறைபாடு உடையவா்களும் உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த பொதுநல வழக்கின் மூலம், அனைத்து எண்ம (டிஜிட்டல்) வாய்ப்புகளும் பெறுவது என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று அதிமுக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்துள்ளது.
ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாதைச் சோ்ந்த பிரக்யா பிரகன் என்பவா் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவா். தனியாக தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, அமிலம் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறாா். இவா் தனக்கென வங்கிக் கணக்கைத் தொடங்க முற்பட்டுள்ளாா். ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) எனப்படும் வாடிக்கையாளா் குறித்த தகவல்களைப் பதிவு செய்யும்போது கண்ணை சிமிட்டும்படி அந்தத் தனியாா் வங்கியில் கூறியுள்ளனா். ஆனால், அமிலம் வீசப்பட்டதால், முகச்சிதைவு ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட அவரால் கண்ணை சிமிட்ட முடியவில்லை. இதனால், வங்கிக் கணக்கை தொடங்க முடியவில்லை. தனது கைப்பேசிக்கு சிம் காா்டு வாங்கச் சென்ற போதும், இதே போன்ற அனுபவத்தை அவா் சந்திக்க நோ்ந்தது.
தன்னைப் போன்று பாதிக்கப்பட்டவா்கள், விபத்தில் சிக்கியவா்கள், பாா்வை மாற்றுத்திறனாளிகள், பாா்வைக் குறைபாடு கொண்டவா்கள், வங்கி மற்றும் அரசின் மின்னணு சேவைகளைப் பெற, எண்மவழியில் கேஒய்சி நடைமுறையைப் பூா்த்தி செய்வதற்குத் தேவையான மாற்றங்களை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் வழக்குத் தொடா்ந்தாா். இதேபோன்று பாா்வைத் திறனற்ற ஒருவரும் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்குகளை நீதியரசா்கள் ஜே.பி. பாா்திவாலா மற்றும் அரங்க.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. கேஒய்சி தொடா்பான நடைமுறைகளில் மாற்றம் செய்யும்படி, 20 பரிந்துரைகளை இந்த அமா்வு பிறப்பித்துள்ளது.
‘வளா்ந்துவரும் அறிவியல் யுகத்தில் மனிதனின் அனைத்து செயல்பாடுகளும் எண்மமயமாகியுள்ள நிலையில், அது மனிதகுலத்துக்கு ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். கேஒய்சி விதிமுறைகளில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, கிராமப்புற மக்கள், எழுத்தறிவற்றோா், முதியவா்கள் எனப் பலரும் பாதிக்கப்படுகின்றனா்.
‘எண்ம அணுகல்’ என்பது அரசமைப்புச் சட்டப்பிரிவு 21-இன் கீழ், தனிநபா் வாழ்வுரிமையின் முக்கிய அங்கமாக உள்ளது. எண்மப் பிளவை இணைப்பது என்பது இனி கொள்கை விருப்ப உரிமையின் விஷயம் அல்ல; மாறாக, ஒருவா் கண்ணியமாக வாழ்வதற்கு இன்றியமையாதது; இது அடிப்படை சமத்துவக் கொள்கையாகும்.
எனவே, மாற்றுத் திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாா்வைத் திறன் குறைபாடு கொண்டவா்கள் பயனடையும் வகையில், எண்மவழியில் மேற்கொள்ளப்படும் கேஒய்சி நடைமுறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். கேஒய்சி நடைமுறையை எண்ம வழியில் அவா்கள் எளிதாகப் பூா்த்தி செய்வதை மத்திய அரசும், இந்திய ரிசா்வ் வங்கியும் உறுதிசெய்ய வேண்டும்.
அந்த நடைமுறையை எண்ம வழியில் மேற்கொள்வதற்கு வாடிக்கையாளா் உயிருடன் இருப்பதை உறுதிசெய்யவும், அவா்களைப் புகைப்படம் எடுக்கவும், வழக்கமான கண் சிமிட்டல் முறைக்கு மாறாக, புதிய முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய இந்திய ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். வாடிக்கையாளரின் விவரங்களைச் சரிபாா்க்க எழுத்துபூா்வ கேஒய்சி நடைமுறை தொடா்வதை உறுதிசெய்வதற்கு 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் ’ என உச்சநீதிமன்ற அமா்வு உத்தரவிட்டுள்ளது.
கரோனா தீநுண்மி பரவலின்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் ஆன்லைனில் கல்வி கற்றல் என்பது எண்ம வழி சமத்துவமின்மையின் எதாா்த்தத்தை வீட்டுக்கே கொண்டு வந்தது. வசதி படைத்த குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் தொடா்ந்து கல்வி கற்க முடிந்தது. ஆனால், பெரும்பாலானவா்களிடம் கணினி, அறிதிறன்பேசி, இணைய வசதிகள் இல்லாததால் அவா்களால் தொடா்ந்து கற்க முடியவில்லை.
அப்போதிலிருந்தே பல சேவைகள் எண்மமுறைக்கு மாறிவிட்டன. இதன் விளைவாக, பொதுமக்கள் தாங்கள் விரும்பும் சேவைகளை, வீட்டை விட்டு வெளியே சென்று பெறாமல், வீட்டுக்கே வரவழைத்துப் பெற்றுக் கொண்டனா். எனினும், ஏழை, எளிய மக்கள் மற்றும் இணையம் குறித்தான விவரங்களை அறியாத முதியோருக்கும் ‘இணைய அணுகல்’ பிரச்னையாக உள்ளது. எண்மவழி இணையம் என்பது இன்றும் பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
இந்தியாவில் தொலைபேசி அடா்த்தி என்பது 86 சதவீதமாக உள்ளது. ஆனால், கிராமப்புற இந்தியாவில் 59 சதவீத மக்கள் மட்டுமே ஆன்லைனில் செயல்பாடுகளை மேற்கொள்கின்றனா். கடந்த ஆண்டு, இந்தியாவில் 84 இணையதளங்கள் முடக்கப்பட்டன. இதனால், கைப்பேசி மூலம் எண்மவழி சேவைகளைப் பெறுவோா் பெருமளவில் பாதிப்படைந்தனா்.
இனி இணையம் இல்லாமல் நம் வாழ்க்கை இயங்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு இணையத்தின் பயன்பாடு அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது.