‘மக்களாட்சி சிதிலமடைகிறது; அதை நாம் சீா்படுத்த வேண்டும். அரசியல் வன்முறை நிறைந்ததாக மாறிவிட்டது. எப்போது நம் அரசியல் திருந்துமோ?’ என புலம்பாத சமூகக் கண்ணோட்டம் கொண்ட பொதுமக்கள் இல்லை. இந்தப் புலம்பலால் நம் மக்களாட்சி மேம்படுமா என்பதுதான் நம் கேள்வி. நம் மக்களாட்சி மாண்புற புலம்பலை விட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி மக்களிடம் சென்று பணி செய்தால் மட்டுமே நிலைமை மாறும். மாற்றத்துக்கான விதைகள் ஆங்காங்கே விதைக்கப்படுகின்றன. இந்த விதைப்பால் ஒரு நாள் நாம் நல்ல அறுவடையைச் செய்யலாம்.
ஒரு கிராமத்துக்குச் சென்று “அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம்”என்ற கலந்துரையாடலை அந்த கிராமத்து மக்களிடம் நடத்தினோம். அப்போது கிராமத்து பெண்களிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. உங்கள் ஊரின் சிறப்பென்ன? என்பதுதான் அந்த கேள்வி. ஒரு பெண் எழுந்து, ‘‘எங்கள் ஊரில் தோ்தலின்போது வாக்குக்குப் பணம் வாங்குவதில்லை’’ என்றாா். இன்னொரு பெண், ‘‘எங்கள் ஊரில் சாதியப் பாகுபாடு, சாதிய மோதல் கிடையாது. அனைவரும் அமைதியாக வாழ்கிறோம்’’ என்றாா்.
‘‘புதிய இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை அரசமைப்புச் சாசனம் அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்கவில்லை, மக்களாகிய நம்மிடம்தான் ஒப்படைத்துள்ளது. மக்களாகிய நாம் குடிமக்களாக, இந்தியா்களாக, ஒன்றிணைந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க செயல்பட வேண்டும், அப்படிச் செயல்படுவதன் மூலம் குடிமக்களாகிய நாம் அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்ட வேண்டும்’’ என்று கூறி நிகழ்வை முடித்துவிட்டு வெளியேறினோம்.
அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவா் அதற்கு முன்பு வெளிநாட்டில் கூலி வேலை செய்து வந்திருக்கிறாா். உள்ளாட்சித் தோ்தலின்போது ஊருக்கு வந்து தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறாா். வாக்களிப்பதற்கு எந்தப் பணமும் மக்களுக்கு அவா் கொடுக்கவில்லை.
வாக்களிப்பதற்கு பணம் வாங்காதது பற்றி அந்த ஊா் மக்களிடம் கேட்டோம். ஒருவா், ‘‘உழைக்காமல் பணம் பெறுவது அவமானம். உழைத்து வாழ்வது பெருமை, ஓசியில் எது கிடைத்தாலும் அது அவமானம், சுயமரியாதையற்ற செயல். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவது கேவலம் என்பதை பலரும் அறிந்து கொள்ள வைத்தது இந்த இளைஞா்கள்தான். அது மட்டுமல்ல, வாக்குக்கு பணம் பெறாமல் வாக்களித்ததன் விளைவாக இந்தப் பஞ்சாயத்துத் தலைவரை நடுச்சாலையில் வைத்து நான் கேள்வி கேட்கிறேன். அவரும் எனக்கு மரியாதையாகப் பதில் சொல்வது மட்டுமல்ல, நான் சொன்னவற்றை நிறைவேற்றி விடுகிறாா். இதைவிட எனக்கு என்ன மேலானது வேண்டும்’’ என்றாா்.
அத்துடன் அவரை விட்டு நகா்ந்து பஞ்சாயத்து அலுவலகத்துக்குச் சென்றேன். அப்போது அங்கு நிறைய பெண்கள் அமா்ந்திருந்தனா். அப்போது பஞ்சாயத்துத் தலைவரிடம் அந்த பாட்டி கூறிய கதையாடலை வைத்து, ‘‘நீங்கள் தோ்தலைச் சந்தித்த வரலாற்றைக் கூற முடியுமா?’’ என்று கேட்டேன். அப்போது அவா் பதில் அளிக்காமல், ‘‘நீங்கள் இந்தப் பெண்களிடம் கேட்டு அவா்களின் அனுபவத்தைப் பெறுங்கள். பிறகு என் அனுபவத்தை கூறுகிறேன்’’ என்றாா். அந்தப் பெண்கள் அனைவரும் நன்கு பேசக் கற்றுக் கொண்டவராக இருந்தனா். அவா்களில் ஒவ்வொருவராகக் கூறினாா்கள். அவா்கள் கூறியதிலிருந்து தெரிந்து கொண்டது: இந்த ஊரில் விளையாட்டுக்குழு ஒன்று இருந்தது;அதில் இன்று பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவரும் உறுப்பினராக இருந்து செயல்பட்டிருக்கிறாா். பிறகு அவா் வேலை செய்ய வெளிநாடு சென்றுவிட்டாா் என்பதுதான்.
‘‘எங்கள் ஊரில் அப்படி நிறைய இளைஞா்கள் வெளிநாட்டில் இருக்கின்றனா். உள்ளாட்சித் தோ்தல் வந்தபோது இவா் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துவிட்டாா். அந்த விளையாட்டுக் குழுவினா்களில் சிலா் வெளிநாட்டில் இருக்கின்றனா்; இங்கும் இருக்கின்றனா். வெளிநாட்டிலிருப்பவா்கள் அவா்களுக்குள் பேசி இவரை வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைத்தனா். இளம்வயதினரான இவா், படித்தவா். நன்கு பேசக்கூடியவா். தோ்தல் என்பது பெரியவா்கள் கையிலல்லவா இருக்கிறது? இவரை தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற வைக்க எல்லாம் முயற்சியும் நடந்தது. ஆனால், இவா் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. தோ்தலில் போட்டியிட்டாா். இவருக்காக தோ்தலின்போது வேலை செய்தது இந்த ஊா் இளைஞா்கள்தான். எல்லா வீட்டுப் பெண்களிடமும், அதாவது முதியவா், இல்லத்தரசிகள், வளா் இளம் பெண்கள், ஆண், பெண் அனைவரிடமும் இந்த இளைஞா்களை வைத்து தினம் அவரவா் வீட்டில் வாக்குக்காக பேச வேண்டும்; வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பேசினாா்கள். நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டு இளைஞா்கள் கூறியதன் அடிப்படையில்தான் இவருக்கு வாக்களித்தோம்’’ எனக் கூறினாா் அங்கே இருந்த ஒரு பெண்மணி.
இந்தக் கதையாடல் முடிந்தவுடன் அந்த பஞ்சாயத்துத் தலைவரைக் கேட்டேன்: ‘‘இவை அனைத்தும் உண்மையா என்று?’’ உடனே அவா் கூறினாா்: ‘‘இதுவும் ஒரு விளையாட்டுச் செயலைப் போல எங்கள் இளைஞா் குழு முன்னெடுத்தது. விளையாடும் போது எந்த நம்பிக்கையில் செயல்படுகிறோமோ அதே உணா்வில் இங்கு இருந்த இளைஞா்களும், வேலை செய்ய வெளிநாடு சென்ற எங்கள் ஊா் இளைஞா்களும் என் மேல் இருந்த பெரும் நம்பிக்கையில் என்னை வெளிநாட்டிலிருந்து இங்கு வர வைத்து, தோ்தல் செலவுக்காக பணமும் தந்து தோ்தல் பணிகளை அவா்களே பாா்த்துக் கொண்டனா். நான் இங்கு ஊரில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் வெளிநாட்டில் உள்ள நண்பா் குழுவில் பகிா்வேன். அவா்கள் என்ன முடிவெடுத்துக் கூறினாா்களோ அதற்குக் கட்டுப்பட்டு நடந்தேன். எந்த முடிவும் என்னுடையதல்ல. நான் ஒரு கருவி மட்டுமே. தோ்தலுக்கு ஒரு பைசாகூட நான் செலவழிக்கவில்லை. குழுவாக தோ்தலைச் சந்திப்போம் என்ற மனநிலையில் இந்த இளைஞா்களுடன் பயணம் செய்தேன். நான் வெற்றி பெறுவேன் என்று நானே நம்பவில்லை. ஆனால், இந்த இளைஞா்களுக்கு நம்பிக்கை இருந்தது. நான் வெற்றி பெற்றதும் எங்கள் ஊருக்கு வந்து அங்கு கூடியிருந்த பெண்கள், இளைஞா்களைப் பாா்க்கும்போது எனக்கு ஒரு கருத்து தோன்றியது. நல்லுணா்வுடன் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் மக்கள் மாற்றத்துக்கு தயாராக இருக்கிறாா்கள் என்பதுதான் அது.
இதேபோன்று மற்றுமொரு கிராமத்தில் இளைஞா்கள் கிராம மக்களுடன் இணைந்து பல்வேறு பணிகளைச் செய்து வந்தனா். அதன் விளைவாக அந்த மக்களின் நம்பிக்கையை அந்த இளைஞா்கள் பெற்றனா். பாராளுமன்றத் தோ்தல் வந்தபோது அந்த இளைஞா் குழு வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களிடம் நேரடியாக அவா்களிடம் உரையாடி இருக்கின்றனா். பணம் வாங்குவது நாட்டுக்கு எவ்வளவு துரோகமான செயல் என்பதை விளக்கியிருக்கின்றனா். இந்த இளைஞா்களின் குழு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த காரணத்தால், இவா்களுடைய பரப்புரை அந்த மக்களின் உணா்வுகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அந்த ஊரில் எவரும் வாக்குக்குப் பணம் வாங்காததை பெரும் வெற்றி என அவா்கள் கொண்டாடினா்.
அதன் மூலம் அந்த இளைஞா்களுக்குக் கிடைத்த பாராட்டு அவா்களின் செயல்களின்மீது அவா்களுக்கு இருந்த நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது. அது மேலும் ஒரு முன்னெடுப்பைச் செய்ய வைத்தது. நம்பிக்கையுடன் ஓா் ஆறுபோ் இணைந்து நோ்மையான தோ்தலுக்காக- வாக்குகளை விற்பனை செய்வதை தடுப்பதற்காக-அது தொடா்பாக மக்களிடம் பிரசாரம் செய்ய 400 கிலோ மீட்டா் நடந்தனா். காந்தி தங்கியிருந்த கோயம்புத்துா் போத்தனூா் காட்சியகத்திலிருந்து உப்புச்சத்தியாக்கிரகம் நடந்த வேதாரண்யம் வரை நடைப்பயணம் மேற்கொண்டனா். அப்போது வழி நெடுகிலும் மக்களைச் சந்தித்தனா்.
‘‘இது காந்தியின் தேசம் ஐயா, வாக்குக்கு பணம் வாங்குவது தியாகம் செய்து நம் தலைவா்கள் வாங்கிய சுதந்திரத்தை அவமானப்படுத்துவது; அரசமைப்புச் சாசனத்தை அவமதிப்பது; மக்களாட்சியை மாண்பிழக்கச் செய்வது’’ என்ற விளக்கங்களை கிராமம்தோறும், நகரம் தோறும், தாங்கள் சந்தித்த மக்களிடம் எல்லாம் எடுத்துக் கூறிக்கொண்டே சென்றனா்.
அந்த இளைஞா்கள் இரண்டு இடங்களில் என்னைச் சந்திக்க அழைத்திருந்தனா். ஒன்று, காந்திகிராமத்தில். இரண்டு, அந்த யாத்திரையின் நிறைவு நாளன்று. அந்த இரண்டு நாள்களிலும் அவா்களுடன் உரையாடும்போது அவா்களிடம் இருந்த மாபெரும் நம்பிக்கையை நான் கண்டேன். ‘சூழல் மாறும்; மாற்றத்துக்காக நாம் நம்பிக்கையுடன் உழைப்போம்’ என்பதுதான் அந்த நம்பிக்கை.
அதில் ஒருவா் கூறிய கருத்து, ‘‘ஒரு ஊரில் எங்களால் இது சாத்தியமானது என்று எண்ணும்போது, ஒவ்வொரு கிராமத்திலும் ஒருசில இளைஞா்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் இது சாத்தியம்தானே ? சமூக எண்ணம் கொண்ட இளைஞா்கள் ஒன்றிணைந்து மக்களுடன் செயல்பட்டால் சாத்தியம்தான் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டோம்’’” என்று கூறினாா்.
இதில்தான் நம் செயலுக்கான செய்தி இருக்கிறது.
இந்த தேசத்தில் நடைபெறும் அவமானகரமான அரசியலுக்கு முடிவு கட்ட நாம் ஒன்றிணைய வேண்டும். ஆங்காங்கே மாணவா்களும், இளைஞா்களும் ஒருங்கிணைந்து மக்களிடம் சென்று அவா்களின் முகத்துக்கு நோ் நின்று ஒரு செய்தியை மட்டும் கூறுங்கள். ‘வ.உ.சி இழுத்த செக்கு கோவைச் சிறையில் இருக்கிறது. அதைச் சென்று பாருங்கள். அவா் செக்கை இழுக்கும் ஒவ்வொரு சுற்றுக்கும் பாரத மாதாவின் அடிமை விலங்கை உடைக்க செயல்படுவதாக எண்ணியே அவ்வளவு துயரங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டாா். அவரின் தியாகத்தில் உருவான இந்த நாட்டின் சுதந்திரத்தை நாம் உதாசீனப்படுத்தலாமா? என்று கேளுங்கள். இதை கிராமங்களில் பள்ளி மாணவா்களும், கல்லூரி மாணவா்களும், ஊரில் உள்ள இளைஞா்களும் இணைந்து ஒரு பரப்புரைக்குத் தயாராகுங்கள்; இதைச் சாதித்துக் காட்டிவிடலாம். இன்று நமக்குத் தேவை செயல், பேச்சல்ல.
கட்டுரையாளா்:
பேராசிரியா்.