நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிறந்த நாள் (அக்.2) சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், காந்தியம் என்னும் வாழ்வியல் முறை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என்னும் எண்ணமும் மனதிலே எழுகிறது. மகாத்மா காந்தி எல்லாக் காலங்களுக்கும், எல்லா இடங்களுக்கும் பொருந்துபவர். உலகின் பல இடங்களில் வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது.
காந்தியத்தை நடைமுறைப்படுத்துவது இக்காலச் சூழலுக்கு மிகவும் தேவையானதாகத் திகழ்கிறது. காந்தியத்தால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா மற்றும் "எல்லை காந்தி' என்றழைக்கப்பட்ட கான் அப்துல் காபர்கான் போன்றோர் மகாத்மா காந்தியை தங்களின் முன்னோடியாகக் கருதிச் செயல்பட்டனர்.
மார்ட்டின் லூதர் கிங் மகாத்மா மீதும், அகிம்சையின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டு அமைதிப் போராட்டத்தையே மேற்கொண்டார். அமெரிக்க காந்தி என்றும் அழைக்கப்பட்டார். காந்தியம் உணர்த்தும் சில கருத்துகளை மஹா விரதங்கள் என்றே மகாத்மா காந்தி குறிப்பிடுகிறார்.
முதலில் வருவது சத்தியம் ஆகும். நம் நாடு கடைப்பிடிக்கும் பொன்மொழியானது முண்டக உபநிஷதத்தில் உள்ள ஸத்யமேவ ஜயதே - வாய்மையே வெல்லும் என்னும் மந்திரமாகும். சத்தியம் என்னும் அடித்தளமின்றி எத்தகைய உண்மையான முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. எனவேதான் மகாத்மாக காந்தி உண்மையே கடவுள் எனச் சாற்றுகிறார்.
அகிம்சை என்னும் சொல்லானது பொதுவாக மனம், சொல், செயல்களில் தீமையைச் செய்யாமல் இருப்பது என்னும் பொருளிலே உணரப்படுகிறது. அகிம்சை எனில் அனைவருக்கும் தூய்மையான அன்பைக் காட்டுவது ஆகும். அன்பு, நட்பு, கருணை என்பவை அகிம்சையின் இயல்புகள் ஆகும்.
அகிம்சையின் முழு நிலையை எய்தினால் அவர்களிடம் இருந்து தூய அதிர்வலைகள் எங்கெங்கும் பாய்கின்றன. இதனால், அனைவருக்கும் மனத்திலே மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படுகிறது. பதஞ்சலி முனிவர் அகிம்சையைப் பின்பற்றும் ஒருவனின் அருகிலே பிராணிகள்கூட பகைமையை விட்டொழிக்கின்றன என விவரித்துள்ளார்.
பிரம்மச்சரியம் எனின் நெறிமுறைகளுடன், கட்டுப்பாட்டுடன் வாழ்தல் எனப் பொதுவாகப் பொருள் கொள்ளலாம். இது புலனடக்கத்தையும் உணர்த்துகிறது. களவாடுதல் என்பது மிகவும் தவறான செயலாகும். பிறர் பொருளை நயவாதிருத்தல் எனவும் பொருள் கொள்ளலாம். உழைத்துப் பொருளீட்ட வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. உடைமையின்மை எனின் தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என உணர வேண்டும். தேவைகள் மிகுதியாயின் மனநிறைவு என்பது ஏற்படாது.
பயத்தை உதறித்தள்ள வேண்டும். பயம் சார்ந்த எண்ணங்களையும் கருத்துகளையும் களைந்து எறிந்து, துணிச்சல், ஆற்றல், பொறுமை என்பனவற்றை நம் மனதிலே விதைத்து வளர்க்க வேண்டும். ஏனெனில் மனித மனமே அவனுடைய ஏற்ற-இறக்கத்துக்குக் காரணமாக உள்ளது. பயமுள்ள இடத்தில் தோல்வி ஏற்படக்கூடும். பலவகையான பயங்களிலிருந்து முயற்சித்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும்.
தீண்டாமையானது முற்றிலும் அகற்றப்பட வேண்டும். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை உணர்ந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்று புரிந்து கொண்டால் தீண்டாமை தானே அகன்று விடும். சுவாமி விவேகானந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ரவீந்திரநாத் தாகூர்- இவர்களைப் போன்றே மகாத்மா காந்தியும் இந்தியக் கல்வியாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் சபர்மதி ஆசிரமத்தில் ஒரு பள்ளியை நடத்தினார்; சில கல்விக் கொள்கைகளை வலியுறுத்தினார்.
ஆறு முதல் பதினான்கு வயது வரை உள்ளவர்களுக்கு இலவச ஆதாரக் கல்வியைக் கற்பித்தார். அந்தக் கல்வியானது கைத்தொழிலுடன் இணைந்த கல்வியாக விளங்கியது. அவர்கள் செய்த கைவினைப் பொருள்களை விற்று, செலவை மேற்கொள்ள வேண்டுமெனக் கற்பித்தார். அவரவருடைய தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
நம்முடைய இதயத்தின் ஆழத்திலுள்ள தெய்வத்தன்மையை விழிப்படையச் செய்வதுதான் பிரார்த்தனையின் நோக்கமாகும்; பிரார்த்தனை ஒருவருடைய வாழ்க்கையின் உயிராகும் என மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பாரதத்தின் முதுகெலும்பாக கிராமங்கள் விளங்குகின்றன என மகாத்மா காந்தி உறுதியாக நம்பினார். எளிய வாழ்வை வாழ வேண்டும்; பயனின்றி நேரத்தைச் செலவிடாமல் தக்க நேரத்தில் செய்வதைச் செய்தல் வேண்டும்; அனைவரும் வரவு, செலவு கணக்கு எழுதும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்; உடற்பயிற்சி செய்து உடல், மனநலத்தைப் பேணிக்கொள்ள வேண்டும்; நாள்தோறும் நாட்குறிப்பு எழுதுவது மற்றும் சிக்கனமாக இருப்பது போன்றவை பலவகைகளில் அனைவருக்கும் முக்கியமாக இளைஞர்களுக்கு நன்மை பயக்கும் என அறிவுறுத்தியுள்ளார்.
அவருடைய உயர்ந்த வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகத் திகழ்கிறது. அறம் தவறாத மிக எளிய வாழ்வை மேற்கொண்டார். அரசியல் சுதந்திரம் மட்டுமே போதுமானதல்ல என்று விளக்கினார். ஒழுக்கம், சமூகவியல், பொருளாதாரம், கல்வி என எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைவதுதான் உண்மையான சுதந்திரம் எனச் சாற்றியுள்ளார். இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து இயற்கை முறை மருத்துவத்தையும் மேற்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் பலரும் பல கோணங்களில் சித்தரித்துள்ளனர். வெளிநாட்டினர் பாரத நாட்டை "காந்தி தேசம்' என்றே மதிக்கின்றனர். அதனால்தான் ஒரு மனிதர் இவ்விதம் வாழ்ந்துள்ளார் என எதிர்காலம் எண்ணி வியக்கும் தன்மையில் அவர் வாழ்வானது அமைந்திருந்தது என ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.