காவலர் மீது காரை மோதிய எதிர்நீச்சல் நாயகி: ஆண் நண்பருடன் சென்றபோது சம்பவம்!
ஆண் நண்பருடன் சென்ற எதிர்நீச்சல் தொடர் நாயகி மதுமிதா, காவலர் மீது காரை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் சின்னத்திரை நடிகை மதுமிதா காவலர் மீது காரை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. இந்த தொடரில், பெண் உரிமைக்காக குரல் கொடுக்கும் வலுவான கதாபாத்திரத்தில் நடிப்பதால் மதுமிதாவுக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்த நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கோயிலுக்கு தனது ஆண் நண்பருடன் கடந்த வாரம் மதுமிதா சென்றுள்ளார். கோயிலில் இருந்து திரும்பிய மதுமிதா, கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்வதற்காக ஒருவழி பாதையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
Advertisement
அப்போது, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் எழுத்தராக உள்ள காவலர் ரவிக்குமார் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தை மதுமிதா மோதியுள்ளார். இதில் காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரித்ததில், காரை ஓட்டியது சின்னத்திரை நடிகை மதுமிதா என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தங்கள் மீது தவறு இல்லை என்றும், காவலர் தான் வேகமாக வாகனத்தை ஓட்டி வந்தார் என்றும் மதுமிதாவும், அவரது நண்பரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, முதல்கட்டமாக மதுமிதா மற்றும் அவரது ஆண் நண்பரிடம் மதுபோதையில் வாகனத்தை ஓட்டினார்களா என்பதை அறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இருவரும் மதுபோதையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மதுமிதாவின் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுமிதாவுடன் காரில் பயணம் செய்தவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், சென்னை ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைக்காட்சி தொடரில் புரட்சிகரமாக பேசும் கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதா, நிஜ வாழ்க்கையில் போக்குவரத்து விதியை மீறி காவலருக்கு விபத்து ஏற்படுத்திய சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.