செய்திகள்

சினிமாவை நம்பி நீங்களும்தான் வியாபாரம் செய்கிறீர்கள்: ‘விவேகம்’ பட விமரிசனத்துக்கு விஜய் மில்டன் கடும் கண்டனம்!

எழில்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தப் படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது.

இந்நிலையில் தன்னுடைய யூடியூப் தளத்தில் விவேகம் படத்தைக் கடுமையாக விமரிசனம் செய்திருந்தார் ‘நீலச்சட்டை’ மாறன். இந்நிலையில் அவருடைய விமரிசனத்துக்குக் கண்டனம் தெரிவித்து கோலி சோடா படப்புகழ் இயக்குநர் விஜய் மில்டன் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சினிமாவை விமரிசனம் செய்வதற்கு நீலச்சட்டைப் போட்டால் போதும் என்றால் நீலச்சட்டை போட்டவர்களை விமரிசனம் செய்வதற்கு சினிமாக்காரனாக இருந்தால் போதும்தானே. அண்ணா வணக்கம். 

உங்களுடைய விவேகம் விமரிசனம் பார்த்தேன். ஏதோவொரு விமரிசனம் சொல்லியிருக்கிறார்கள் என்று உங்களுடைய விமரிசனத்தைத் தாண்டிச் செல்லமுடியாது. சில மணி நேரங்களில் 6 லட்சத்தைத் தாண்டிய வியூஸ் கிடைக்கிறது. 

படம் எடுப்பது என்பது குழந்தையைப் பெற்றெடுப்பது மாதிரி. நல்லபடியாகப் பெற்றெடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் எல்லோரும் போராடுகிறோம். 100 சதவிகித முயற்சியை அளிக்கிறோம். விவேகம் கதை சொல்ல வெட்கப்படுகிறாயா, அவர்களே வெட்கப்படாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் விமரிசனம் செய்வது தவறு. வெட்கப்படுவதற்கும் வேதனைப்படுவதற்குமா ஒன்றரை வருடம் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்? இது அஜித்தும் சிவாவுக்கும் தெரியாதா? 

படம் உருவாவது என்பது ஒரு ரசாயன மாற்றம். அதை எப்படிச் சரியாகச் செய்வதென்று யாருமே கற்றுக்கொள்ளவில்லை. நூறு படங்கள் எடுத்த பாலச்சந்தர் சாரும் கற்றுக்கொள்ளவில்லை. சினிமாவைப் புரட்டிப் போட்ட பாரதிராஜா சாரும் கற்றுக்கொள்ளவில்லை. வெற்றியும் தோல்வியும் எல்லோரும் மாறிக் கொடுப்பதற்குக் காரணம் அது ஒரு வித்தை. பூ பூப்பது மாதிரியான விஷயம். நாம் தண்ணீர் ஊற்றி வளர்க்கத்தான் முடியும். பூ இப்படித்தான் பூக்கவேண்டும் என்று நாம் முடிவு செய்யமுடியாது.  

ஒரு தம்பதியருக்கு ஊனமுள்ள ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அவர்களை இப்படித்தான் கிண்டல் செய்வோமா? சினிமாவை நம்பி நாங்களும் வியாபாரம் செய்கிறோம். நீங்களும் அதே வியாபாரம் செய்கிறீர்கள். காயப்படுத்தும் வார்த்தைகளை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவேண்டும். எது சரி, எது தவறு, நீங்கள் இப்படி எடுத்திருந்தால் என ஒரு வார்த்தை அந்த விமரிசனத்தில் உண்டா? என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT