ஒரே படத்தின் மூலமாக அகில இந்திய நட்சத்திரம் ஆகிவிட்டார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். பாகுபலி 2 படம் ஹிந்தியிலும் சக்கைப் போடு போட்டு இந்தியாவில் மட்டும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால், பிரபாஸுக்கு பிரபல விளம்பர நிறுவனங்களிடையே ஒரே மவுசு!
தங்களுடைய விளம்பரத் தூதராக பிரபாஸை நியமிக்க பல செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டன. கடும் போட்டியில் சீனாவின் ஜியோனி செல்போன் நிறுவனம் வெற்றி பெற்று பிரபாஸின் பிரபலத்தைத் தன்வசப்படுத்தியுள்ளது.
விராட் கோலி, ஷ்ருதி ஹாசன் துல்கர் சல்மான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஜியோனி நிறுவனத்தின் விளம்பரத் தூதராக உள்ளார்கள். அவர்களுடன் பிரபாஸும் தற்போது இணைந்துள்ளார்.
பாகுபலி படத்தின் முதல் பாகம் 2011-ல் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் பாகம் 2017-ல் வெளிவந்துள்ளது. கடந்த 5 வருடங்களாக எந்தவொரு புதுப் படத்திலும் நடிக்க பிரபாஸ் ஒப்புக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் இந்தக் காலகட்டத்தில் ரூ. 18 கோடி மதிப்புள்ள விளம்பர ஒப்பந்தங்களையும் அவர் தவிர்த்துள்ளார்.
தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்த பிரபாஸ் ஒரேடியாக பாகுபலியில் தஞ்சம் புகுந்தார். படத் தயாரிப்பாளர்களும் விளம்பர நிறுவனங்களும் அவரை மொய்த்தார்கள். ஆனால், பாகுபலில் மட்டுமே முழுக் கவனமும் செலுத்தினார் என்று அவரை மெச்சிக்கொள்கிறார் இயக்குநர் ராரஜமெளலி.
ரூ. 18 கோடி விளம்பர ஒப்பந்தங்களை மறுத்த பிரபாஸுக்கு பாகுபலி படத்தின் சம்பளமாக ரூ. 25 கோடி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மாதம் அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு சமீபத்தில் இந்தியா திரும்பியுள்ள பிரபாஸ், தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் சாஹு படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.