தென்னிந்தியத் திரையுலகை மட்டம் தட்டிய ஹிந்தி நடிகை: ஹன்சிகா, குஷ்பு கடும் கண்டனம்!
அவர்களுக்குச் சேலை அணிந்து குண்டாகக் காட்சியளிக்கும் கதாநாயகி தேவை. நிறைய சம்பளம் அளிப்பார்கள்...
சர்ச்சை இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லை. ஆனால் ஹிந்தியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தென்னிந்தியத் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தியில் பிக் பாஸ் 11 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அதில் இதுவரை வெளிவராத ஒரு பகுதியின் காணொளி, சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஹிந்தி நடிகை ஹினா கான், தென்னிந்திய நடிகைகளை விமரிசனம் செய்து பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஹினா கான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியதாவது:
தெற்கில், மிகக் குண்டாக இருக்கும் கதாநாயகிகளையே விரும்புகிறார்கள். இதனால்தான் நான் இரு தென்னிந்தியப் படங்களை நிராகரித்தேன். அவர்களுக்குச் சேலை அணிந்து குண்டாகக் காட்சியளிக்கும் கதாநாயகி தேவை. நிறைய சம்பளம் அளிப்பார்கள். நான் நிராகரித்த இரு படங்களில் ஒன்றை மட்டும் ஏன் வேண்டாம் எனச் சொன்னோம் என்று வருந்தியுள்ளேன். வெங்கடேஷ், மகேஷ் பாபு நடித்த ஒரு சூப்பர் ஹிட் படம் அது. இப்போது நடிகைகள் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள். முன்பு 1,2,3,4,5,6 சொல்வார்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கு வடக்கிலிருந்து தென்னிந்தியத் திரையுலகில் பிரபல நடிகைகளாக இருக்கும் ஹன்சிகா, குஷ்பு போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஹன்சிகா தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இப்படிப் பேசியதற்கு என்ன அர்த்தம்? தென்னிந்தியத் திரையுலககை இந்தளவுக்கு எப்படி மட்டம் தட்டலாம்? தென்னிந்தியத் திரையுலகில் ஏராளமான பாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளார்கள், நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியுமா? எங்களைத் தரக்குறைவாகப் பேசியதற்குக் கண்டனங்கள். தென்னிந்தியத் திரையுலகின் நடிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஹினா கான் சொல்வதெல்லாம் அபத்தம் என்று கூறியுள்ளார்.
குஷ்பு கூறியதாவது: கண்ணியமாக நடந்துகொள்வது எப்படி எனத் தென்னிந்தியாவிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.