முகப்பு
செய்திகள்

இசையமைக்க அழைக்கிறார் என்றே முதலில் நினைத்தேன்: ‘நாச்சியார்’ குறித்து ஜி.வி. பிரகாஷ்

ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பிற்குச் செல்லும் போது மாணவர்களிடையே ஒரு புதிய உத்வேகம்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் - நாச்சியார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இசை - இளையராஜா. ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர். இப்படத்துக்காக தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய பாடலொன்றை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார். தணிக்கையில் நாச்சியார் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு பாலா இயக்கியுள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியானது.

படத்தில் நடித்தது குறித்து ஜிவி பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:

நாச்சியார் திரைப்படம் விமரிசகர்களிடமும், மக்களிடமும், திரையுலகப் பிரமுகர்களிடம் எனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளது. 

எப்போதுமே பாலா சார் படத்தில் நடிப்பது என்பது பல நடிகர்களின் கனவு. 'நாச்சியார்' படத்துக்காக என்னை அணுகியபோது கூட, இசையமைக்கத்தான் அழைக்கிறார் என்றே நினைத்தேன். 'நீ தான் நடிக்கிற' என்ற பாலா சார் சொன்ன போது, நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. 

'நாச்சியார்' படத்தில் என் நடிப்பைப் பார்த்த அனைவருமே 'நல்ல நடிகன்' என்று தெரிவித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் பாலா சார் மட்டுமே. அவர் காட்சியை எப்படி உள்வாங்கி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். என் நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருக்கு என மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதில் என்னுடன் நடித்த ஜோதிகா மேடம், இவானா ஆகியோருக்கும் நன்றி. 

இளையராஜா சாருடைய இசையில் நடித்தது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என ஒவ்வொன்றுமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. 

'நாச்சியார்' படத்தில் நடித்த அனைவருக்குமே திரையுலகில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பாலா சார். ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பிற்குச் செல்லும் போது மாணவர்களிடையே ஒரு புதிய உத்வேகம் கலந்த சந்தோஷம் இருக்கும். அதே சந்தோஷத்துடன் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறேன். 'நாச்சியார்' படம் கொடுத்த நம்பிக்கையில் என் நடிப்பு பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.