செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதைவிட எப்படி வாழ்ந்தார் என்பதையே சரித்தரம் பேசும்! ஒரு ரசிகனின் பார்வை!!

வி. உமா

இந்திய சினிமாவில் இன்றளவும் கதாநாயகர்களே முன்னணியில் இருந்து வருகிறார்கள். கதாநாயகி இரண்டாம் பட்சமாகவும், கவர்ச்சிக்காகவும் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். விதிவிலக்காக ஒருசில நடிகைகள் தங்களுடைய அபாரமான திறமையாலும், பேரழகாலும் திரையுலகில் ஜொலித்ததுண்டு. அத்தகையவர்களுள் இந்திய சினிமாவையே தன் மயக்கும் வசீகரத்தால் கட்டுண்டு இருக்கச் செய்தவர் நடிகை ஸ்ரீதேவி எனலாம். 

இயல்பான நடிப்பும், மென் குரலும், அதிராத பாங்குடனும் ஸ்ரீதேவி ஒரு கதாபாத்திரத்திற்கு உயிரோவியமாய் பொருந்திப் போய்விடுவார். ஒவ்வொரு நடிகருடனும் அவர் நடிக்கும் போதும் வித்யாசப்படுத்தி தன்னுடைய பங்களிப்பை வெகு சிறப்பாய் செய்துவிடுவார். எண்பது தொண்ணூறுகளில் திருமணத்துக்குத் தயாராகும் ஆண்கள் ஸ்ரீதேவியைப் போல அழகான பெண் வேண்டும் என்று அவரை அடைமொழியாக்கும் அளவுக்கு அக்காலத் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தார்.

இயக்குநர் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தை யாராலும் மறக்க முடியாது. ஸ்ரீதேவியின் முகபாவனைகள், அப்பாவியான குழந்தைத்தனமான சிரிப்பு, சுப்ரமணி என்று நாய்க்குட்டியை கொஞ்சும் அழகு என ஒவ்வொரு ப்ரேமிலும் ஸ்ரீதேவியின் கொள்ளை அழகையும் நடிப்பாற்றலையும் செதுக்கியிருப்பார் பாலு மகேந்திரா. கண்ணே கலைமானே என்ற பாடல் இளையராஜாவின் என்றென்றும் இனிய கீதமாக பலரின் மனத்துக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும். கெமிஸ்ட்ரி என்று இப்போது பிரயோகிக்கப்படும் வார்த்தைக்கு அப்போதே உதாரணமாகத் திகழ்ந்த ஜோடி கமல் ஸ்ரீதேவிதான். திரைப் பயணத்தில் கமல் ஸ்ரீதேவி இருவரின் மிக முக்கியமான படம் அது. இவர்கள் இருவரின் மிகச் சிறந்த படங்களில் வறுமையின் நிறம் சிகப்பு தவிர்க்க முடியாத ஒன்று. 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' என இன்று வரை அந்தப் பாடலின் அழகான கம்போஸிங்கில் உள்ளத்தைப் பறி கொடுப்பவர்கள் பலர். அந்த காட்சிக்கு உயிர் கொடுத்தவர் ஸ்ரீதேவி. எவர்க்ரீன் சினிமா ஜோடிகளில் கமல் ஸ்ரீதேவி ஜோடியே ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டுள்ளனர். 

இந்தியத் திரையின் பிரபல நடிகர்களான எம்ஜிஆர், கமல், ரஜினி, ரிஷி கபூர், அனில் கபூர், சல்மான் கான், ஷாருக் கான் என அனைவருடனும் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. தற்கால நட்சத்திரங்களான அஜித், விஜய் ஆகியோருடனும் நடித்தார். பல பிரச்னைகளுக்கு இடையே 1996-ம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளரான் போனி கபூரை மணந்தார் ஸ்ரீதேவி. சொந்த வாழ்க்கையிலும் சரி திரைப்பட வாழ்க்கையிலும் சரி  ஸ்ரீதேவி அனைவராலும் விரும்பப்படும் ஒருவராகவே இருந்து வந்துள்ளார். இதற்காக அவர் கொடுத்த விலை சற்று அதிகம்தான். புகழின் உச்சியில் வாழ்ந்தவர்களுக்கு எப்பாடுபட்டாவது அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் தன் குடும்ப வாழ்க்கைக்காகவும், குழந்தைகளுக்காக தன்னுடைய புகழை விட்டு விலகினார் ஸ்ரீதேவி. அதன்பின் அவருடைய மறு பிரவேசமும் வெற்றிகரமாக அமைந்தது அவரது திறமைக்கான சாட்சியன்றி வேறில்லை.

அவரது வாழ்க்கையில் சந்தித்த மேடு பள்ளங்கள், சிக்கல்கள், உடல் நலத்துக்காகவும், அழகுக்காகவும் அவர் செய்த மருத்துவங்கள் என பலவிஷயங்கள் விமரிசிக்கப்பட்டாலும் அவர் அதை எல்லாம் கடந்து தன்னியல்புப் படி மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார். இந்நிலையில் திடீரென்று அவரது மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் மாரடைப்பு என்ற செய்தியே வந்தது. அதன்பிறகு பிரேத பரிசோதனைக்குப் பிறகு மது அருந்திய நிலையில் குளியலறை தொட்டி நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிர் இழந்தார் என்று தெரிய வந்தது. அதுவரை அவரைப் புகழ்ந்து கொண்டிருந்தவர்கள் குடி போதையில் மயங்கி விழுந்தார் என்று எதிர்மறையாக எழுதத் தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலம் ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் மகிழ்வடையச் செய்த ஒரு அற்புதமான நடிகை இன்று உயிருடன் இல்லை. அவருக்காக அஞ்சலி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை அவதூறு பரப்பாதீர்கள் என்பதே ஸ்ரீதேவியின் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கும். 

மனித வாழ்க்கை திரையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் போலத்தான். அடுத்த காட்சி என்னவென்று யாருக்கும் தெரியாது. பாத்ரூமுக்குச் சென்றவர் பின் ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்று அவர் அதற்கு முந்தையை கணத்தில் நினைத்திருப்பாரா? ஸ்ரீதேவி நடித்த ஒரு படத்தின் தலைப்பான ‘வாழ்வே மாயம்’ என்பது எத்தனை பெரிய உண்மை!

முடிவினை நோக்கிய
பயணத்தில்
எவர் கதவு அகலத் 
திறந்திருக்குமோ 
அந்த இடத்திற்கு
எந்த நொடியிலும்
தேவன் வரக் கூடும்
அவனுடைய பெயரை
மரணம் என்றும் இருக்கக் கூடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று அமோகமான நாள்!

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT