முகப்பு
செய்திகள்

நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று இறுதிச்சடங்கு! முன்னேற்பாடுகள் தீவிரம்!

மும்பையில் ஸ்ரீதேவின் இறுதிச்சடங்குகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:20 PM
பகிர்:

இந்தியத் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி (54) , மாரடைப்பால் சனிக்கிழமை நள்ளிரவு துபையில் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ஆண்டுகளைக் கடந்து இந்திய சினிமாவில் கோலோச்சினார்.

இந்தியத் திரையுலகில் தனி இடத்தைத் தக்க வைத்திருந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோர், துபையில் நடந்த உறவினர் மோஹித் மார்வா இல்லத் திருமண விழாவுக்குச் சென்றிருந்தனர். அந்தத் திருமண நிகழ்வில் ஸ்ரீதேவி பச்சை நிற உடையில் ஜொலித்தார். இதுவே ஸ்ரீதேவி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாக மாறிவிட்டது. திருமண நிகழ்ச்சி முடிந்து, ஹோட்டல் அறைக்குச் சென்ற ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. துபை நேரப்படி இரவு 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் மும்பையில் ஸ்ரீதேவின் இறுதிச்சடங்குகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்ரீதேவியின் உடல் மதியம் 4 மணிக்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை சாண்டாகுரூஸ் பகுதியில் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.