முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ்ஸை முதல்வராக்குவோம் என்று மோடி இதுவரை சொல்லியிருக்கிறாரா? மு.க. ஸ்டாலின் கேள்வி

திருச்சி பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியது பற்றி...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:26 AM
திருச்சி பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - dmk
பகிர்:

பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று பிரதமர் மோடி இதுவரை சொல்லி இருக்கிறாரா? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக - பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை பாஜகவிடம் விற்றுவிடுவார் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறினார்.

திருச்சியில் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில்,

"மக்களுக்கு நேரடியாக ரூ. 8,000 கூப்பனைத் தரப்போகும் நம்முடைய இல்லத்தரசிகள் திட்டத்தைப் பார்த்து இன்றைக்கு வயிறு எரிந்து, அது ஊழலுக்கான திட்டம் என்று சொல்கிறார் பழனிசாமி.

தி.மு.க. செய்யும் ஒவ்வொரு திட்டமும் தரமானதாக இருக்கும்! எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன்... கலைஞர் 2006 தேர்தலின்போது, கலர் டி.வி. வழங்குவோம் என்று சொன்னார். ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனே, கலர் டி.வி.யின் கொள்முதல் நேர்மையாகவும், தரமானதாகவும், யாரும் குறை சொல்ல முடியாததாகவும் இருக்க வேண்டும் முடிவு என்று, அதற்கான டெண்டரை முடிவு செய்ய, எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வையும் சேர்த்து அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்தார். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே கலர் டி.வி.க்களை வழங்கும் விழாவைத் தொடங்கி, ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான, நம்முடைய தமிழர்களின் வீடுகளுக்கு கலர் டி.வி.க்களை வழங்கினோம். கிட்டத்தட்ட இருபது வருடம் ஆகிறது. இன்றைக்கும் பல வீடுகளில் கலர் டி.வி.யாக மட்டுமல்ல; கலைஞர் டி.வி.யாக அது நிலைத்து நிற்கிறது! இதற்கு பெயர்தான் குவாலிட்டி!

இதுவே, அ.தி.மு.க. ஆட்சியில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என்று கொடுத்தீர்கள். என்ன ஆனது? காயலாங்கடையில் இருக்கிறது. வாய் இருக்கிறது என்று என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

ஏற்கெனவே, 2021 தேர்தலில், மகளிர் உரிமைத்தொகையாக நாங்கள் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொன்னவுடனே, அவசர அவசரமாக அவர் வீட்டில் இருக்கும் ஜெராக்ஸ் மெஷினை ஆன் செய்து, 1,500 ரூபாய் தருவோம் என்று அறிக்கை வெளியிட்டார். பழனிசாமியின் அலங்கோல ஆட்சி நிர்வாகத்தின் ஊழல் தெரிந்து, மக்களான நீங்கள் அவரைப் புறக்கணித்தீர்கள். இப்போதும் மக்களுக்கு நல்லது நடக்கக் கூடாது என்று, வயிற்றெரிச்சலில், தன்னை போலவே பிறரையும் நினைத்து ஊழல் நடக்கும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அண்மையில், மதுரையில் ஒரு சம்பவம் நடந்தது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு டிரெய்லர்தான் அது. மதுரையில் நடைபெற்ற கூட்டத்தின் நுழைவு வாயிலில் தந்தை பெரியார் படத்தை வைக்கக் கூடாது என்று பா.ஜ.க. சொன்னதும், சுயமரியாதையே இல்லாமல் அதை எடுக்கத் துணிந்தவர்தான் பழனிசாமி. மதுரை பா.ஜ.க. ஆதரவுக் கூட்டத்தில், தந்தை பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் காணொளியை வெளியிட்டார்கள். அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்தால் விட்டிருப்பாரா? அல்லது ஜெயலலிதா அம்மையார் இருந்தால் விட்டிருப்பாரா? பேரறிஞர் அண்ணாவை இவ்வாறு அசிங்கப்படுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருப்பார்களா? பழனிசாமியின் ஒரே சாதனை அ.தி.மு.க. எனும் கட்சியை அடிமைக் கூட்டமாக சீரழித்து இருப்பதுதான். 'திராவிடம்' என்ற சொல்லும் அந்தக் கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க. முன்னணியினர் அதையும் கூட தடுக்கவில்லை. “திராவிடம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது, நான் புராணங்களை எல்லாம் படித்தது இல்லை” என்று கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே சொன்னவர்தான் பழனிசாமி.

யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை - தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக இருந்து கொண்டிருப்பவர்தான் பழனிசாமி.

சிறுபான்மைச் சமூகத்திற்கும், இலங்கைத் தமிழர்க்கும் துரோகம் இழைக்கும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்து அது நிறைவேற துணைபோன கட்சிதான் அ.தி.மு.க. ஏன், இவர்களுடன் சேர்ந்து 'பாட்டாளி' அன்புமணி ராமதாசும் ஆதரவாக வாக்களித்து துரோகம் செய்தார். இவர்களால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான அந்தச் சட்டமே மாநிலங்களவையில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 70 பேர் கொல்லப்பட்டார்கள். இவர்களின் இரத்தக்கறை இன்றைக்கு அ.தி.மு.க. கையில்தான் இருக்கிறது.

இவ்வளவுக்கு பிறகும் பழனிசாமி என்ன பேசினார்? “குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே! எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார் என்று காட்டுங்கள்" என்று சொன்னவர்தான் பழனிசாமி. ஆனால், சிறுபான்மையினர் வாக்குகள் வேண்டும் என்று, 2024 தேர்தலில் தனியாக நின்று நாடகம் ஆடியபோது, சிஏஏ சட்டத்தை கண்டிப்பதாக பல்டி அடித்தார் பழனிசாமி. “பா.ஜ.க. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள், சிஏஏ சட்டம் ஒரு வரலாற்றுப் பிழை” என்று பிளேட்டை அப்படியே திருப்பிப் போட்டார் பழனிசாமி.  நீங்கள் இப்போது அந்தச் சட்டத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? தைரியம் இருந்தால், வெளிப்படையாகச் சொல்லுங்கள்.

பழனிசாமியின் துரோகப் பட்டியல் இதோடு நிற்கவில்லை. மூன்று வேளாண் சட்டங்களை பா.ஜ.க. கொண்டு வந்தபோது கண்ணை மூடிக்கொண்டு அதையும் ஆதரித்தார். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய எட்டு மாநில விவசாயிகளை, “புரோக்கர்கள்” என்று வசைபாடிக் கொச்சைப்படுத்தினார். இப்படி, பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து, முழு சந்திரமுகியாகவே மாறியிருக்கிறார் பழனிசாமி. அதாவது, முழு சங்கியாகவே மாறிவிட்டார்.

ஊர் ஊராகச் சென்று, அதிமுக கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். பிரச்சினை இல்லை என்றால், எதற்காக அத்தனை முறை தில்லிக்குச் சென்றீர்கள். தில்லிக்குச் சென்று அமித்ஷாவின் அப்பாய்ன்ட்-மெண்டுக்காக பல மணி நேரம் ஏன் காத்துக்கிடந்தீர்கள்? அதுவும் வேறு வேறு காரில் மாறி மாறி சென்று, முகத்தை எல்லாம் மூடிக்கொண்டு ஏன் வெளியில் வந்தார்?

கூட்டணிக்குத் தலைமை அ.தி.மு.க-தான் என்று சொல்கிறார்கள். ஆனால், அனைத்து கட்சிகளும் ஏன் பா.ஜ.க.விடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்? கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை என்றால், அதில் இருக்கும் சிறிய கட்சிகள் எல்லாம் ஏன் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடாமல், பா.ஜ.க.வின் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்? பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று பிரதமர் மோடி இதுவரை சொல்லி இருக்கிறாரா? அ.தி.மு.க. என்ற பெயரைக்கூட அவர் சொன்னது போன்று எனக்குத் தெரியவில்லை. என்டிஏ சர்க்கார், என்டிஏ சர்க்கார் என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

ஆனால், நாம் “தமிழ்நாடு வெர்சஸ் என்டிஏ, தமிழ்நாடு வெர்சஸ் தில்லி” என்று சொன்னால் மட்டும், “இது என்ன தில்லி தேர்தலா?” ஏன் அப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார் பழனிசாமி! தன் மீதான ஊழல் புகார்கள், உறவினர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் இருந்து தப்பிக்க மொத்தக் கட்சியையும் பா.ஜ.க.விடம் பழனிசாமி அடகு வைத்துவிட்டார்.

மக்கள் வாக்களிக்காமலேயே எம்எல்ஏக்களை ஏலத்தில் எடுத்து ஒரு முறை முதலமைச்சர் ஆகிவிட்டார். கூவத்தூர் வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரியும். மீண்டும் இவரிடம் ஆட்சி சென்றால் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடகு வைத்துவிடுவார். அடகு என்ன, மொத்தமாக விற்றுவிடுவார். இவரின் ஓனரான பா.ஜ.க.வின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதுதான். நேராக வந்தால் தமிழ்நாட்டு மக்கள் நோட்டாவிற்கு கீழே அனுப்பிவிடுவார்கள்! அதனால்தான் அ.தி.மு.க. முகமூடியுடன் வருகிறார்கள்.

கடந்த 11 ஆண்டு காலத்தில் பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கான எதையும் செய்யவில்லை. நம்முடைய மக்களின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. 12 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்காக இதுவரை ஒரு சிறப்புத் திட்டம் கூட இல்லை. அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையும் இப்போது என்ன நிலையில் இருக்கிது என்று உங்களுக்கு தெரியும். இப்போது வரை கட்டி முடிக்கப்படவில்லை.

நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியைக் கூட விடுவிக்க மறுக்கிறார்கள்.

மதுரை, கோவை, திருச்சி மாநகரங்களின் எதிர்கால வளர்ச்சிக்காக மெட்ரோ இரயில் திட்டத்தைக் கேட்டோம். அதுவும் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒழுங்காகத் தராமல் இழுத்தடிக்கிறார்கள். ஓசூர் விமான நிலையத்திற்கும் அனுமதி தரவில்லை. பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வி நிதியையும் தருவதைத் தடுக்கிறார்கள். குடிநீர் திட்ட நிதியும் இல்லை.

இவ்வளவு அநீதிகளையும் செய்துவிட்டு, தேர்தல் வந்துவிட்டது என்று, தமிழ்நாட்டிற்குக் கிளம்பி வருகிறார், பிரதமர் மோடி. கடந்த மாதம்கூட இதே திருச்சிக்கு பிரதமர் மோடி வந்தார். அப்படி வந்தவர், “இதெல்லாம் மத்திய பா.ஜ.க. அரசின் மூலமான தமிழ்நாட்டிற்கு செய்த திட்டங்கள் என்று சொன்னாரா? எங்களால் தமிழ்நாட்டிற்கு இதெல்லாம் கிடைத்திருக்கிறது” என்று பட்டியல் போட்டுச் சொன்னாரா? இருந்தால்தானே சொல்ல முடியும்!

இதில், தி.மு.க. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார். என்னுடைய ஒவ்வொரு பேச்சிலும், ஒவ்வொரு சாதனைத் திட்டம் குறித்தும், புள்ளிவிவரங்களோடு விளக்கிச் சொல்கிறேன். நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடையும் பலரும் ஊடகங்களில் அதை தொடர்ந்து பதிவு செய்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மக்களான உங்களிடம் கேட்டிருந்தாலே, திராவிட மாடல் திட்டங்களை வரிசையாக சொல்லியிருப்பீர்கள். பரவாயில்லை, எப்போதும் டூர் மோடிலேயே இருக்கும் பிரதமருக்கு இதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள நேரம் இருந்திருக்காது; அப்படி இல்லை என்றால், தமிழ்நாட்டைப் பற்றி புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்காது. அவர் இங்கு தங்கியிருந்து தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்" என்று பேசினார்.

summary

Has Modi ever said that he would make EPS the Chief Minister? M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.