திருமணம் முடிந்து போனி கபூர் இந்தியா திரும்பியது ஏன்?: ஸ்ரீதேவியின் குடும்ப நண்பர் புதிய தகவல்!
நாங்கள் அனைவரும் இந்தியாவுக்குத் திரும்பாமல் அங்கேயே இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது...
நடிகை ஸ்ரீதேவி துபையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது அங்கு ஞாயிற்றுக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தகவல் கிடைத்தது. இது திரையுலகினரையும், ஏராளமான அவரின் ரசிர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் அவரது மரணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. துபை ஹோட்டலில் உள்ள அறையில் குளிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் (பாத் டப்) சுயநினைவில்லாமல் தவறி விழுந்து மூழ்கி ஸ்ரீதேவி மரணமடைந்ததாக துபை அரசு நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுட்டுரையில் துபை அரசின் செய்தித் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவுகளில், 'சுயநினைவை இழந்த நிலையில் ஹோட்டலில் உள்ள குளிக்கும் தண்ணீர் தொட்டியில் இருக்கும் நீரில் விழுந்து ஸ்ரீதேவி மூழ்கியதாலேயே உயிரிழந்துள்ளார். ஸ்ரீதேவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து முடித்த பிறகு, இந்த முடிவுக்கு காவல்துறை தலைமையகம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை, சட்ட நடைமுறைகளை கையாளும் அமைப்புக்கு (துபை பப்ளிக் புராசிக்யூஷன்) காவல்துறை மாற்றியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவி குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அமர் சிங், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஸ்ரீதேவின் மரணம் எனக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது. என்னால் அதை நம்பமுடியவில்லை. நானும் அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டேன். பிறகு, உத்தரப் பிரதேசத்தின் தொழில்துறை மாநாட்டில் கலந்துகொள்ள வந்துவிட்டேன். திருமணச் சமயத்தில் இந்த மாநாடு நடைபெறுவதால் நானும் போனி கபூரும் இந்தியாவுக்குத் திரும்பினோம். நான் ஒருநாள் முன்பு திரும்பினேன். எனக்குப் பிறகு போனி கபூர் வந்தார்.
திருமணக் கொண்டாட்டங்களையும் ஸ்ரீதேவியும் விட்டுவந்தது தேவையற்ற வேலை. திருமணத்தின் நாங்கள் அனைவரும் மிகவும் கொண்டாட்டமாக இருந்தோம். தொழில்துறை மாநாட்டில் எனக்கு இருக்கையும் வசதியும் அளிக்கப்படவில்லை. என்னை அவமானப்படுத்தியதால் திரும்பி வந்துவிட்டேன். அதன்பிறகு போனி கபூர் மீண்டும் துபை சென்றுவிட்டார். நாங்கள் அனைவரும் இந்தியாவுக்குத் திரும்பாமல் அங்கேயே இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.
ஸ்ரீதேவியும் போனி கபூரும் மிகவும் அன்பான ஜோடிகள். போனி கபூருக்கு எது நல்லதோ அதுதான் ஸ்ரீதேவிக்கு நல்லது என்றுதான் வாழ்ந்தார்கள்.
சமூகவலைத்தளங்களில், ஸ்ரீதேவிக்குக் கடன் இருந்ததாகவும் அவரிடம் பணம் இல்லையென்றும் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் அவருக்கு லட்சங்களைத் தர பலர் தயாராக இருந்தார்கள். ஆனால் கவனமுடன் தன் நிகழ்ச்சிகளை அவர் தேர்ந்தெடுத்தார். எனவே அவருக்குப் பணம் ஒரு பிரச்னையே இல்லை. எந்தக் கடனும் இல்லை. படங்கள் நன்றாக ஓடியுள்ளன. யாருக்கும் எந்தப் பாக்கியும் தரவேண்டியதில்லை. நடைபெற்றது துயரமான சம்பவம்.
ஸ்ரீதேவி தீவிரமாக மது அருந்த மாட்டார். சிலசமயங்களில் பொதுவாழ்க்கையில் உள்ள சிலர் செய்வதுபோல வைன் அருந்துவார்.
சனிக்கிழமை இரவு 12.40 மணிக்கு போனி கபூர் தொலைப்பேசியில் அழைத்து ஸ்ரீதேவி மரணமடைந்தது குறித்து என்னிடம் தகவல் தெரிவித்தார். அன்றிரவு எனக்குத்தான் முதலில் பேசினார் என நினைக்கிறேன். அவரிடமும் வேறு விளக்கமாக எதுவும் பேசவில்லை. சூழல் அப்படி இருந்தது என்று கூறியுள்ளார்.