FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கணினி வேலை செய்வோர் மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்பு! ஏன்?

கணினி, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி...

Updated On : 1 ஏப்ரல் 2026, 3:28 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

- அன்னா ஜோஸ்

கணினியில் வேலை செய்வோருக்கு மட்டுமல்ல, இப்போது குழந்தைகளுக்கும் கழுத்து வலி ஏற்படுவது அதிகரித்து வருவதாகவும் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கணினி, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது முதுகு விளைவதால் 'டெக் நெக் சின்ட்ரோம்' எனும் பாதிப்பு ஏற்படுவதாகவும் எச்சரிக்கின்றனர்.

கொச்சியைச் சேர்ந்த ஆலன் என்ற 6 வயது சிறுவனுக்கு கடுமையான கழுத்து வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்த நிலையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சிறுவன் எங்கும் கீழே விழவில்லை, வேறு எந்த காரணங்களும் இல்லை. இந்த இளம்வயதில் ஏன் கழுத்து வலி? என்று பெற்றோரிடம் விசாரித்ததில் அவன் பல மணி நேரம் போனில் வீடியோ கேம் விளையாடியது தெரிய வந்தது. ஆலன் மட்டுமல்ல, இப்போது பல குழந்தைகள் கழுத்து மற்றும் தோள்பட்டை வலியுடன் மருத்துவமனைக்கு வருவதாகவும் இந்த வயதில் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதது என்றும் கொச்சியில் உள்ள விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனையின் முதுகெலும்பு மற்றும் ஸ்கோலியோசிஸ்(முதுகெலும்பில் ஏற்படும் வளைவு) அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருஷ்ண குமார் கூறுகிறார்.

Advertisement

Advertisement

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது கழுத்து வளைகிறது. அதாவது முதுகெலும்பு வளைகிறது. இதனையே 'டெக்ஸ்ட் நெக் சின்ட்ரோம்'(text neck syndrome) அல்லது 'டெக் நெக் சின்ட்ரோம்'(tech neck syndrome) என்று கூறுகிறோம். குழந்தைகள் மற்றும் இளம்வயதினருக்கு இது தற்போது அதிகரித்து வருகிறது. கழுத்து அதிகமாக முன்னோக்கி வளைந்திருப்பதே இந்த நிலையாகும்.

"முன்பு, 50, 60 வயதுகளில் உள்ளவர்கள் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள், வயது முதிர்வு காரணமாக அவர்களுக்கு கூன் விழுந்திருக்கும். ஆனால் இப்போதெல்லாம் 20களின் பிற்பகுதியிலும் 30களிலும் கழுத்து வலியால் அதிகம் பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். இது ஐடி துறையில் வேலை செய்வோர் மட்டுமின்றி நீண்ட நேரம் கணினி, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் அதிகமாக இருக்கிறது. ஆரம்பத்தில், கழுத்து வலி, கழுத்து விறைப்பு, தலைவலி, குறிப்பாக தலையின் பின்புறத்தில் வலி இருக்கலாம். மேலும் கைகள் மரத்துப்போதல், கூச்ச உணர்வு இருக்கலாம்" என்கிறார் டாக்டர் கிருஷ்ண குமார்.

- ENS

2022-ல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, வயது வித்தியாசமின்றி இந்த பாதிப்பு பரவலாக உள்ளதாகவும் முதுகின் கீழ்ப் பகுதியில் உள்ள வலி போலவே இதுவும் தற்போது பேசப்பட வேண்டிய ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் தரவுகளின்படி, பல்கலைக்கழக மாணவர்கள் 73% பேருக்கும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களில் 64.7% பேருக்கும் கழுத்து அல்லது முதுகு வலி உள்ளது. அவர்களில் சுமார் 39.2% பேர், கழுத்து அல்லது கீழ் முதுகு வலியின் காரணமாகத் வேலை செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளனர். கணினிகள், ஸ்மார்ட்போன்களுக்கு இன்று பலரும் அடிமையாகிவிட்டதே இதற்கு முக்கிய காரணம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

"ஒருவருடைய தலையின் சராசரி எடை சுமார் 5 கிலோ. பல்வேறு கோணங்களில் குறிப்பாக 30 டிகிரி, 45 டிகிரி, 60 டிகிரி கழுத்தை வளைக்கும்போது கழுத்தின் மீது ஒரு விசை உருவாக்கக் கூடும். கழுத்து முன்னோக்கி வளையும்போது தலையின் எடையால் தசைகள், தசைநார்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கழுத்தை 30 டிகிரியில் வளைக்கும்போது தலையின் எடை 3 மடங்கு அதிகரிக்கிறது. இதுவே 45 டிகிரியில் 4 மடங்கும் 60 டிகிரியில் 5 மடங்கும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கழுத்தை அதிகமாக வளைக்கும்போது தலையின் எடை அதிகமாக கழுத்துப் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது கழுத்தின் மீது சுமார் 20-25 கிலோ எடைக்கான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் கழுத்தில் ஏற்படும் இந்த தொடர்ச்சியான அழுத்தமும் சிரமமும் கழுத்துத் தசைகள், தசைநார்கள், முதுகில் உள்ள டிஸ்க் ஆகியவற்றில் தேய்மானத்தை வேகப்படுத்துகின்றன.

- ENS

படுக்கையில் படுத்துக்கொண்டு டிவி, ஸ்மார்ட்போன் பார்த்தாலும், ஒருபக்கமாக படுத்தாலும் கழுத்து வளைகிறது, அதனால் பாதிப்பும் ஏற்படுகிறது. அதேபோல வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் போதிய இருக்கை இல்லாமல் மோசமான நிலையில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். வீட்டில் இருந்து வேலை செய்யும் சூழ்நிலைகளில், அலுவலகத்தில் உள்ளதைப் போன்றே இருக்கை அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நின்றுகொண்டு வேலை செய்வதற்கான மேசையும் பயன்படுத்தலாம்" என்கிறார் டாக்டர் கிருஷ்ண குமார் கூறினார்.

மேலும், கழுத்து வலி தொடர்ந்தால், கூச்ச உணர்வு அல்லது மரத்துப்போதல் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும் ஏனெனில் அது நரம்பு அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

summary

Wrong posture can strain your neck; children also suffer from neck pain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments