முகப்பு
செய்திகள்

ஸ்ரீதேவி உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைப்பு: எம்பாமிங் நடைமுறைகள் தீவிரம்!

ஸ்ரீதேவி உடல் அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல் எம்பாமிங்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:21 PM
பகிர்:

ஸ்ரீதேவி மரணம் தொடர்பான விசாரணையை முடித்து வைத்துள்ளது துபை காவல்துறை.

நடிகை ஸ்ரீதேவி துபையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது அங்கு ஞாயிற்றுக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தகவல் கிடைத்தது. இது திரையுலகினரையும், ஏராளமான அவரின் ரசிர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

துபை ஹோட்டலில் உள்ள அறையில் குளிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் (பாத் டப்) சுயநினைவில்லாமல் தவறி விழுந்து மூழ்கி ஸ்ரீதேவி மரணமடைந்ததாக துபை அரசு நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுட்டுரையில் துபை அரசின் செய்தித் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவுகளில், 'சுயநினைவை இழந்த நிலையில் ஹோட்டலில் உள்ள குளிக்கும் தண்ணீர் தொட்டியில் இருக்கும் நீரில் விழுந்து ஸ்ரீதேவி மூழ்கியதாலேயே உயிரிழந்துள்ளார். ஸ்ரீதேவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து முடித்த பிறகு, இந்த முடிவுக்கு காவல்துறை தலைமையகம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை, சட்ட நடைமுறைகளை கையாளும் அமைப்புக்கு (துபை பப்ளிக் புராசிக்யூஷன்) காவல்துறை மாற்றியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையின் விசாரணை முடிவடைந்த நிலையில் ஆவணங்கள் இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் ஸ்ரீதேவி உடலை ஒப்படைக்க துபை காவல்துறை அனுமதியளித்துள்ளது. ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என துபை அரசு வழக்கறிஞர் கடிதம் வழங்கியுள்ளார்.

இதனால் ஸ்ரீதேவி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக துபை அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி வழக்கில் அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீதேவி உடல் அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல் எம்பாமிங் செய்வதற்காக முஹைஸ்னா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எம்பாமிங் செய்யப்பட்ட பிறகு, இன்றிரவு ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்குக் கொண்டு வரப்படலாம் என்று அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.