செய்திகள்

நடிகர் ஆர்யா பங்குபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தடை கோரி மனு: மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு

DIN

நடிகர் ஆர்யா பங்குபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
  மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த ஜானகியம்மாள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
 தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8.30 முதல் 9.30 மணி வரைக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கலந்துகொள்ளும் 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான பெண்ணைத் தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி இயக்கப்படுகிறது. இதற்காக அந்தப் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
  நிகழ்ச்சித் தொகுப்பாளரான நடிகை சங்கீதா பெண்களைக் குறிப்பிடும்போது தேர்வு,  நீக்கம் உள்ளிட்ட கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார். 
 இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலின சமத்துவத்துக்கு எதிரானது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல சாதனைகளை புரிந்து வரும் நிலையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. 
இதனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
 எனவே இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தும், தனியார் தொலைக்காட்சி நிறுவன தலைமை செயல் அலுவலர், நடிகர் ஆர்யா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகை சங்கீதா ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், ஆர். ஹேமலதாஅடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர், மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT