விஷால் நடித்துள்ள இரும்புத்திரை படத்துக்கு பாஜக எதிர்ப்பு
விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளதாவது...
மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் பாஜகவினர் இரும்புத்திரை படம் திரையிடப்பட்டுள்ள சென்னை காசி திரையரங்கில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அத்திரையரங்கில் இன்றைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நடிகர் விஷால் நடித்து இன்று வெளியாகியுள்ள இரும்புத்திரை படத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் தாக்கல் செய்த மனுவில், நடிகர் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டை குறித்து தவறாகச் சித்திரித்து காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆதார் அடையாள அட்டைக்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களைத் தவறாக பயன்படுத்துவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளுடன் திரைப்படம் வெளியானால், டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆதார் திட்டங்கள் குறித்து மக்களிடம் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதுடன் அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள். எனவே, சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் வரை இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். தணிக்கை வாரியம் தணிக்கை செய்த பிறகு படம் வெளியாவதால் இரும்புத்திரை படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதையடுத்து இரும்புத்திரை படம் இன்று வெளியானது.
இந்நிலையில் இரும்புத்திரை படத்தின் வெளியீட்டுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விஷால் வீட்டை அவர்கள் முற்றுகையிடப் போவதாகத் தகவல் வெளியானதால் விஷால் வீட்டுக்கும் இரும்புத்திரை வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கும் காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை நீக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை காசி திரையரங்கின் முன்பு பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் காசி திரையரங்கில் இன்றைய காட்சிகள் அனைத்தும் (மதியம் மற்றும் மாலை) ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. எனினும் இன்றைய மாலைக் காட்சிக்கு இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதார் அட்டையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் அப்படத்தின் வெளியீட்டைத் தடுத்து நிறுத்தக் கூடாது. அறிவில்லாத செயலாக இது தென்படுகிறது. தாங்கள் சொல்ல நினைப்பதைப் படமாக எடுக்க படைப்பாளிகளுக்குச் சுதந்தரம் உள்ளதுதானே? சலிப்படைய வைக்கும் செயல்கள் என்கிற அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் விஷால்.
இதனால் விஜய் நடித்த மெர்சல் படம் போல இரும்புத்திரை படமும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.