செய்திகள்

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன்: காரணத்தை விளக்கும் மருத்துவர்!

எழில்

தனது கல்லீரலில் 75 சதவிகிதம் கெட்டுவிட்டதாகப் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: எனது கல்லீரல் 75 சதவிகிதம் பாதிப்படைந்துவிட்டது. தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் என்னுடைய கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் எனக்கு 20 வருடங்கள் கழித்துத்தான் தெரியும். மீதமுள்ள 25 சதவிகிதத்தில்தான் நான் வாழ்ந்து வருகிறேன். நான் காசநோய் பாதிப்பில் இருந்து தப்பியுள்ளேன். அனைவருமே உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். 

அமிதாப் பச்சனின் இந்த நிலை குறித்து சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

இவரைத் தெரியாத இந்தியர்கள் இருக்க முடியாது. பிக் பி என்று அழைக்கப்படும் இவர் நேற்று தனது வலைப்பூவில் எழுதியுள்ள அனுபவக்கட்டுரை நம் பார்வையை ஈர்த்தது. அவர் கூறியிருப்பதாவது: "எனது கல்லீரல் 75 சதவிகிதம் செயலற்று விட்டது. மீதம் உள்ள 25 சதவிகிதத்தில் நான் இயங்கி வருகிறேன்." அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் செய்தியாக இருக்கிறது. அவருக்கு இறைவன் பூரண உடல் நலத்தை தருவானாக...

அவருக்கு கல்லீரல் சுருக்க நோயான CIRRHOSIS வந்துள்ளது.

அவர் மதுவை ஒரு முறை கூட தீண்டாத ஒரு சில நடிகர்களுள் ஒருவர். பொதுவாக ஒரு பொது அபிப்ராயம் இங்கு நிலவுகிறது. மது அருந்துவோருக்குத்தான் கல்லீரல் நோய் வரும் என்பது தான் அது. உண்மையில் அதுவொரு மூடநம்பிக்கையே. மதுவை அறவே சுவைக்காத பலருக்கும் கல்லீரல் நோய் வரலாம். 

அதற்கான காரணங்கள்:

- ஹெபாடைடிஸ் பி எனும் வைரஸ் கிருமித் தொற்று
- NASH எனும் Non Alcoholic Steato Heptosis
- இந்த நோய் மது அருந்தாதவர்கள் ஆனால் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அதிகம் உண்பர்வகளுக்கு வரும் நோயாகும்.

இதை ultra sound abdomen and pelvis ஸ்கேனில் "Fatty liver" என்று குறிப்பிடுவார்கள்.

இந்த Fatty liver நோயில் படிநிலைகள் உண்டு.
கிரேடு 1,2,3 என நோய் முற்றும்.
இதன் கடைசி நிலை சிரோசிஸ் எனும் கல்லீரல் அழற்சி நோய் தான்.

எனது தந்தையும் இந்த வகை மது அருந்தாதவர்களுக்கு வரும் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார்.

அமிதாப் பச்சனுக்கு இந்த நோய் வந்ததற்குக் காரணமாக இருப்பது, "ஹெபாடைட்டிஸ் பி" நோய்த்தொற்று.

அவர் 1982-ம் ஆண்டு "கூலி" எனும் படப்படிப்பில் இருக்கும் போது பயங்கரமான விபத்து ஏற்பட்டு தனது மண்ணீரலில் (spleen) பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அதில் அபாயகரமான அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது ( Near fatal situation)

அவரைக் காப்பாற்ற பல யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. அப்படி ஏற்றப்பட்ட ஒரு யூனிட் ரத்தத்தில் ஹெபாடைடிஸ் பி வைரசும் சேர்ந்து வந்து விட்டது. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் தான் அவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது.

இது எதைக்காட்டுகிறது என்றால் அமிதாப் போன்ற உச்ச நிலை நடிகர்கள் கூட தங்களுக்கு வருடம் ஒருமுறை ஹெல்த் செக் அப் செய்து கொள்வதில்லை. அல்லது அவர் செய்த ஹெல்த் செக் அப்களில் ஹெபாடைடிஸ் பி குறித்த பரிசோதனை இடம்பெற வில்லை என்று தெரிகிறது.

ஹெபாடைடிஸ் பி வைரஸைப் பொறுத்தவரை, ஒன்று சுனாமி போல சீறிப்பாய்ந்து கல்லீரலை ஆறு மாதம் முதல் ஒரு வருடத்துக்குள் புசித்து ஏப்பம் விட்டு விடும்.

அல்லது

கும்பகர்ணத் துயில் கொண்டு பல ஆண்டுகள் கழித்து எழுந்து சோம்பேறித்தனமாகத் தனது வேலையைச் செய்து கொண்டிருக்கும்.

பின்னாள் சொன்ன கும்பகர்ண வெரைட்டியாக அமைந்து விட்டால் , அவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.

அமிதாப்பும் அந்த வகையில் தான் வருகிறார்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ( 1982 முதல் 2012 வரை) தூங்கி விட்டு இப்போது எழுந்து பிரச்னை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

நவீன மருத்துவம் இந்த வைரஸை எப்படி அணுகுகிறது?

கல்லீரல் ரத்தப் பரிசோதனையில் யாருக்கேனும் பிரச்னை இருந்தால் அவர்களுக்குக் கட்டாயமாக Viral markers எனும் இந்த ஹெபாடைடிஸ் வைரஸ் தொற்று இருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப் பார்த்து எந்த நிலையில் பிரச்னை இருக்கிறது என்று கண்டறியப்படுகிறது.

Hepatitis B என்று அறியப்பட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதற்குப் பிறகு தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது. இதற்கு அமிதாப்பச்சனே உதாரணம்.

Hepatitis B வைரஸின் அளவைக் குறைக்க நம்மிடம் வைரஸ் கொல்லி மாற்று மருந்து இருக்கிறது. அதைக் குடல் மற்றும் கல்லீரல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தருவார்கள்.

இந்த நோய் எப்படிப் பரவுகிறது?

- ரத்தம் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதால் பரவும்.

- பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவும்.

- தாயிடம் இருந்து சேய்க்குப் பரவும்.

தற்போது ஏற்றப்படும் ரத்தம் அனைத்தும் ஹெபாடைடிஸ் வைரஸ்கள் இருக்கின்றனவா என்று கட்டாயம் சோதித்த பின் ஏற்றப்படுகின்றன.

ஹெபாடைடிஸ் பி தொற்று இருப்பவர்கள் ஆணுறை/ பெண்ணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடலாம்.

ஹெபாடைடிஸ் பி-க்கு எதிரான தடுப்பூசி, குழந்தை பிறந்தவுடனே போடப்படுகிறது.

அதற்குப் பிறகு 45 நாட்கள், 75 நாட்கள், 105 நாட்கள் போடப்படும் பெண்ட்டாவேலண்ட் தடுப்பூசியில் ஹெபாடைட்டிஸ் பி-க்கு எதிரான தடுப்பு மருந்து இருக்கிறது.

ஒருவேளை உங்களுக்கு இந்த நான்கு ஊசிகளும் போடப்பட்டிருக்கவில்லை என்றால் கவலை வேண்டாம்..

இதே தடுப்பூசியை - முதல் நாள். ஒரு மாதம் கழித்து, பிறகு ஆறாவது மாதம் என்று போட்டுக்கொண்டால் இந்த வைரஸுக்கு எதிரான தடுப்புச் சக்தியை நம்மால் பெற முடியும்.

இந்தத் தடுப்பூசி, விலை குறைந்த எளிய தடுப்பு முறையாகும். இதை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்

ஹெபாடைடிஸ் பி வைரஸ் தொற்றால் ஏற்பட்ட கல்லீரல் நோய்க்கு முறையான நவீன மருத்துவ சிகிச்சை எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

கல்லீரல், இடியைக்கூடத் தாங்கும் ஓர் உறுப்பு; நம் உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு; அதன் நலனைப் பாதுகாப்பது நமது பொறுப்பு.

பின் குறிப்பு - எனது தந்தை கடந்த 2016-ம் ஆண்டு முதல் பேலியோ எனும் மாவுச்சத்தைக் குறைத்து கொழுப்பைக் கூட்டி உண்ணும் உணவு முறை + கல்லீரல் சிறப்பு நிபுணரின் ஊக்கம் மற்றும் மருந்துகளால் கல்லீரல் இயக்கத்தை இறைவன் கருணையால் முறையாகப் பேணி வருகிறார்.

நன்றி அமிதாப். உங்களால் ஒரு விழிப்புணர்வு கட்டுரை பிறந்தது என்று எழுதியுள்ளார்.

மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT