அமில வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் வேடத்தில் நடித்துள்ள தீபிகா படுகோன்: சபாக் பட டிரெய்லர் வெளியீடு!
தன்னை ஒருதலையாகக் காதலித்தவனின் காதலை ஏற்க மறுத்ததால் 15-வது வயதில் அமிலம் வீச்சுக்கு ஆளான லட்சுமி அகர்வால்...
தன்னை ஒருதலையாகக் காதலித்தவனின் காதலை ஏற்க மறுத்ததால் 15-வது வயதில் அமிலம் வீச்சுக்கு ஆளான லட்சுமி அகர்வால், தன்னம்பிக்கையுடன் போராடி அவனுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கி தந்தார். இதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாராட்டுதலைப் பெற்ற லட்சுமி அகர்வால், சில ஆண்டுகள் கழித்து அலோக் தீட்சித் என்பவரைக் காதலித்து ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார். தன்னைப் போன்று அமிலம் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சமீபத்தில் சண்டிகரில் சமூக அமைப்பு ஒன்றை லட்சுமி அகர்வால் துவங்கினார்.
இப்போது இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குநர் மற்றும் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் திரைப்படமொன்றை தயாரித்துள்ளார். லட்சுமி அகர்வால் வேடத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார். சபாக் (Chhapaak) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சபாக், அடுத்த வருடம் ஜனவரி 10 அன்று வெளிவரவுள்ளது.