7-வது நாளில் ரூ. 150 கோடி வசூலைத் தொட்ட ஹிந்திப் படம்!
ரோஹித் ஷெட்டி இயக்கிய படங்களில் இந்தியாவில் ரூ. 100 கோடியை வசூலித்துள்ள எட்டாவது படம்...
பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள படம் - சிம்பா. ரன்வீர் சிங், சாரா அலி கான், அபூர்வா மேத்தா போன்றோர் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 28 அன்று வெளியானது.
இந்தப் படம் வசூலில் அசத்தி வருகிறது. முதல் மூன்று நாள்களில் ரூ. 50 கோடியை இந்தியாவில் தொட்டது. 5-வது நாளில் ரூ. 100 கோடியைத் தாண்டியது இதன் வசூல். 7-வது நாளில் ரூ. 150 கோடியை எட்டியுள்ளது. வெளிநாடுகளில் முதல் வாரத்தில் இந்தப் படம் ரூ. 60 கோடியை வசூலித்துள்ளது. ரோஹித் ஷெட்டி இயக்கிய படங்களில் இந்தியாவில் ரூ. 100 கோடியை வசூலித்துள்ள எட்டாவது படம். இயக்குநர்களில் வேறு யாருக்கும் இவ்வளவு ரூ. 100 கோடி ஹிட் படங்கள் கிடையாது. ரன்வீர் படங்களில் இந்தியாவில் ரூ. 100 கோடியை எட்டியுள்ள நான்காவது படம் இது.
இந்த வேகத்தைப் பார்க்கும்போது, சிம்பா படம் இந்தியாவில் மட்டும் நிச்சயமாக ரூ. 250 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018-ல் ரூ. 100 கோடியைத் தொட்ட 13-வது ஹிந்திப் படம் இது.
இந்தியாவில் வரி நீங்கலாக ரூ. 300 கோடியை எட்டியுள்ள ஹிந்திப் படங்கள்: பிகே (2014), பஜ்ரங்கிபைஜான் (2015), சுல்தான் (2016), டங்கல் (2016), பாகுபலி 2 (2017), டைகர்ஜிந்தாஹை (2017), பத்மாவத் (2018), சஞ்சு (2018). இப்படங்களில் ரூ. 500 கோடியைத் தாண்டிய ஒரே படம் - பாகுபலி 2 (ஹிந்தி டப்பிங்).