உலகளவில் அதிகமாக வசூலித்த படம் என்கிற பெருமையை அடைந்துள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் (Avengers: Endgame).
அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்தின் அடுத்தப் பாகமான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம் அதே படக்குழுவினரால் உருவாக்கப்பட்டு சமீபத்தில் வெளியானது. ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ளார்கள். ஏப்ரல் 26 அன்று வெளியானது.
இந்தப் படம் வசூலில் படிப்படியாக மேலே உயர்ந்துகொண்டிருந்தது. முதல் 11 நாள்களில் டைட்டானிக் படத்தின் ஒட்டுமொத்த வசூலைத் தாண்டியது. உலகளவில் 2 பில்லியன் டாலர் (ரூ. 13,875 கோடி) வசூலை விரைவாகப் பெற்ற படம் என்கிற பெருமையை சமீபத்தில் அடைந்தது. இதன்மூலம் 2 பில்லியன் டாலர் வசூலை 47 நாள்களில் அடைந்த அவதார் படத்தின் சாதனையையும் பின்னுக்குத் தள்ளியது. இதன் முந்தைய பாகமான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார், படம் வெளியான ஏழு வாரம் கழித்து, உலகளவில் 2 பில்லியன் டாலர் வசூலித்தது. அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் (Star Wars: The Force Awakens), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே 2 பில்லியன் டாலரை வசூலைத் தாண்டிய நிலையில், இந்த வெற்றிக்கோட்டை எட்டிய ஐந்தாவது படம் என்கிற பெருமையைப் பெற்றது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்.
மே மாதத் தொடக்கத்தில், 2.18 பில்லியன் டாலர் (ரூ. 15, 121 கோடி) வசூலின் மூலம் உலகளவில் அதிக வசூலை அடைந்த படங்களில் 2-ம் இடத்தைப் பிடித்தது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம். இந்நிலையில், 2.78 பில்லியன் டாலர் (ரூ. 19,282 கோடி) வசூலைப் பெற்று உலகளவில் அதிகமாக வசூலித்த அவதார் படத்தின் முதல் இடத்தைத் தற்போது கைப்பற்றியுள்ளது. 2.79 பில்லியன் டாலர் வசூலுடன் உலகளவில் அதிகமாக வசூலித்த படங்களில் முதலிடம் பிடித்துள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்.
உலகளவில் அதிகமாக வசூலித்த படங்கள்
1. அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் - 2.79 பில்லியன் டாலர் (ரூ. 19,248 கோடி)
2. அவதார் - 2.78 பில்லியன் டாலர் (ரூ. 19,179 கோடி)
3. டைட்டானிக் - 2.18 பில்லியன் டாலர் (ரூ. 15,040 கோடி)
4. ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் - 2.1 பில்லியன் டாலர் (ரூ. 14,487 கோடி)
5. அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் - 2.04 பில்லியன் டாலர் (ரூ. 14,074 கோடி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.