முறையாக சந்தா கட்டாத காரணத்தால் நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா, நடிகை ஆர்த்தி உள்ளிட்ட 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
2019 - 2022-ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இதனை நடத்துகிறார்.
நாசர் தலைமையிலான "பாண்டவர் அணி'யில் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். "பாண்டவர் அணி'யை எதிர்த்து போட்டியிடும் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் உருவாக காரணமாக இருந்தவர் நாடக உலகின் முன்னோடியான சங்கரதாஸ் சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியில் கே.பாக்யராஜ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
விஷால் உள்ளிட்ட "பாண்டவர் அணி'யினர், சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சிபிராஜ் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை காலை மனு தாக்கல் செய்தனர். தொடர் படப்பிடிப்பில் இருந்து வரும் கார்த்தியின் வேட்புமனுவை நாசர் தாக்கல் செய்தார். தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசரை நடிகர் கமல்ஹாசன் முன் மொழிந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலையில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இந்த அணியின் சார்பில் களம் இறங்கும் ஐசரி கணேஷ், உதயா உள்ளிட்டோரும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த அணியின் சார்பில் பொருளாளர் பதவிக்கு ஜெயம் ரவி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் பொருளாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். செயற்குழு பதவிகளுக்கு பாக்யராஜ் அணியின் சார்பில் கே.எஸ்.ரவிக்குமார், விமல், நிதின் சத்யா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவு பெற்றது. ஜூன் 14-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தத் தேர்தல், சென்னை அடையாறு ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
நடிகர் சங்கத் தேர்தலுக்கு 90 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். 29 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மனுக்களைச் சரிபார்க்கும் பணிகள் இன்று நடைபெற்றன. இதில், நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா, நடிகை ஆர்த்தி உள்ளிட்ட 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நபர் சங்கத்தில் ஏழு வருடங்கள் உறுப்பினராக இருக்கவேண்டும். மேலும், கடந்த டிசம்பர் மாதத்தில் ஆண்டுச் சந்தா கட்டியிருக்கவேண்டும். இதே விதிகள் வேட்பாளரை முன்மொழிபவருக்கும் உள்ளது. இந்நிலையில் இந்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாத விமல், ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த 5 பேரும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதேசமயம் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.