முகப்பு
செய்திகள்

தொடரும் குழப்பங்கள்: விஜய் சேதுபதி படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல்!

சிந்துபாத் படத்தை வெளியிடத் திரையரங்குகள் தயக்கம் காட்டின. இந்தச் சிக்கலால்

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:18 AM
பகிர்:

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்கள் இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா. கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வான்சன் மூவிஸ் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளன.  

இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டச்சிக்கல் காரணமாக சிந்துபாத் படம் இன்று வெளியாகவில்லை. 

பாகுபலி 2 படத்தின் தமிழ் உரிமையை ஆர்கா நிறுவனத்திடமிருந்து கே புரொடக்‌ஷன்ஸ் வாங்கி வெளியிட்டது. ஆனால் ஒப்பந்தமான தொகையை முழுவதுமாகக் கொடுக்கவில்லை. தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரூ. 28 கோடிக்கு வாங்கிய கே புரொடக்‌ஷன்ஸ், ரூ. 12.50 மட்டுமே செலுத்தியுள்ளது.  ஆர்கா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட காசோலையும் வங்கியிலிருந்து திரும்பியுள்ளது.

இதையடுத்து தெலங்கானா நீதிமன்றத்தில் ஆர்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சிந்துபாத் மற்றும் என்னை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய இரு படங்களையும் வெளியிட தடை விதித்தது தெலங்கானா நீதிமன்றம். எனினும் இந்தத் தடையை எதிர்த்து அந்த வழக்கில் வென்றது கே புரொடக்‌ஷன்ஸ்.

இதையடுத்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஆர்கா நிறுவனம். தடை விதித்தது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் ஜூன் 21 அன்று சிந்துபாத் வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் குழப்பம் நீடித்தது. 

தடைக்கான உத்தரவின் நகலை கியூப், யுஎஃப்ஓ நிறுவனங்களுக்கு அனுப்பியது ஆர்கா நிறுவனம். இதையடுத்து சிந்துபாத் படத்தை வெளியிடத் திரையரங்குகள் தயக்கம் காட்டின. இந்தச் சிக்கலால் சிந்துபாத் படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகவில்லை. 96 படம் வெளியான போதும் இதே போன்றதொரு சிக்கலை எதிர்கொண்டார் விஜய் சேதுபதி. குறுகிய காலத்தில் அவர் நடித்துள்ள மற்றொரு படம் பணப்பிரச்னையில் மாட்டிக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.