செய்திகள்

நடிகர் சங்க நில விவகாரம்: மே 20-இல் சரத்குமார், ராதாரவி ஆஜராக உத்தரவு

DIN


நடிகர் சங்க நில விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மே 20-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என மாவட்ட குற்றவியல் பிரிவு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

கூடுவாஞ்சேரி அருகே, வேங்கடமங்கலம் கிராமத்தில் நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான 26 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை சங்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த சரத்குமார், பொதுச்செயலராக இருந்த ராதாரவி உள்ளிட்ட 4 பேர் முறைகேடாக விற்பனை செய்துவிட்டனர் என தற்போதைய நடிகர் சங்கப் பொதுச்செயலர் விஷால் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். 

இதை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

தொடர்ந்து, இந்த வழக்கை முறையாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி,  விஷால் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி புகார் குறித்து விசாரணை நடத்தி 3 மாத காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.  இந்நிலையில், விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை கடந்த வெள்ளிக்கிழமை (மே 10) நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என விஷாலுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். 

ஆனால், விஷால் கடந்த வாரம் ஆஜராகவில்லை. படப்பிடிப்பு வேலைகள் இருப்பதால் மற்றொரு நாளில் ஆஜராவதாக விஷால் தரப்பில் பதில் கடிதம் கொடுக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள வரும் மே 20-ஆம் தேதி அவர்கள் இருவரும் ஆஜராக வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் பிரிவு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT