முகப்பு
செய்திகள்

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகியதை உறுதி செய்த இயக்குநர் மிஷ்கின்!

மிக விரைவில் எனது அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:00 PM
பகிர்:

மிஷ்கின் இயக்கியுள்ள சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - இளையராஜா, ஒளிப்பதிவு - தன்வீர் மிர்.

இந்தப் படத்துக்கு மக்கள் அளித்த ஆதரவுக்காக நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். ஓர் அறிக்கையில் அவர் கூறியதாவது:

இதை மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட அளவில்லாத அன்பு என்றே கூறுவேன். படத்தைப் பார்த்த மக்கள் எடுத்துச் சென்றதும், கொடுத்ததும் அதுதான். எந்த வகை ஜானராக இருக்கட்டும், எந்த வகைப் பின்புலத்தில் கதை சொன்னாலும் பார்க்கும் பார்வையாளன் உணர்வுபூர்வமாக உணர்ந்தால் மட்டுமே அதனைக் கொண்டாடுவான்.

Advertisement

நான் இந்தப் படங்களைக் கண்மூடித்தனமான நம்பிக்கையில்தான் உருவாக்கினேன். ஆனால், இறுதியில் அளவிலா அன்பைப் பெற்றிருக்கிறேன். 'கண்மூடித்தனமான நம்பிக்கை, ஆத்மாவின் தேடல்' இரண்டும்தான் வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தம் என்பதை நம்புபவன் நான். உண்மை என்னவெனில் எனது 'பிசாசு' நாயகன் சித்தார்த், 'துப்பறிவாளன்' கணியன் பூங்குன்றன், 'சைக்கோ' கௌதம் அனைவரும் இந்த மந்திரத்தை நம்புபவர்களே.

ரசிகர்கள் இதனை வாழ்வின் அன்பாக எடுத்துச் செல்ல வேண்டுமென்பதே என் விருப்பம். நான் வெகு பணிவுடன் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள், பணிபுரிந்த நடிக, நடிகையர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விமர்சகர்கள், என் வளர்ச்சியை விரும்பும் அன்பு உள்ளங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனக்குத் தனித்துவ வெற்றி தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் அனைவரையும் மகிழ்விக்கும் திரைப்பயணத்தைத் தொடர விரும்புகிறேன். மிக விரைவில் எனது அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

இதன்மூலம் விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து தான் விலகியுள்ளதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் மிஷ்கின். 

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருந்த துப்பறிவாளன் 2 படத்துக்கு இசை - இளையராஜா. துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு லண்டனில் தொடங்கியது. எனினும் சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறியுள்ளதாகவும் இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே தொடர்ந்து இயக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. மிஷ்கினுக்குப் பதிலாக துப்பறிவாளன் 2 படத்தைத் தான் இயக்குவதை விஷால் உறுதி செய்துள்ளார். 

இதையடுத்து, மிஷ்கின் அடுத்து இயக்கும் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments