கரோனா நோய்த் தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என அமிதாப் பச்சன் குடும்பத்தில் 4 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் அவர்களுடைய வீட்டில் முதலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் வெள்ளி இரவு ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.
கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நால்வரும் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்கள். சிகிச்சைக்கு நல்ல முறையில் பலன் கிடைத்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப்பும் அபிஷேக் பச்சனும் இன்னும் ஓரிரு நாள்கள் மருத்துவமனையில் இருப்பார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு இருமல் பிரச்னை இருந்தது. என்றாலும் தற்போது நலமுடன் உள்ளார். ஐஸ்வர்யா ராயும் அவருடைய மகளும் இன்னும் இரு நாள்களாவது மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று நால்வரின் உடல்நலன் பற்றி மருத்துவமனை வட்டாரங்கள் சமீபத்தில் தகவல் தெரிவித்தன.
இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அமிதாப் பச்சன் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
உங்கள் அன்பைக் காண்கிறோம், உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்கிறோம், நன்றியுடன் கைகூப்பி வணங்குகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.