படப்பிடிப்பை இப்போது யார் நடத்துகிறார்கள்?: நடிகை ரகுல் ப்ரீத் சிங் கேள்வி!
தன்னைப் பற்றிய தவறான செய்திக்கு மறுப்பு தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார்...
தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அதிகக் கவனம் பெற்றார். தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அயலான் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரகுல் ப்ரீத் சிங் மறுப்பதாகவும் கரோனா அச்சுறுத்தலைக் காரணமாகச் சொல்வதாகவும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் படத்திலிருந்து ரகுல் ப்ரீத் சிங்கை வெளியேற்றவும் படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் வெளியான செய்திக்கு ரகுல் ப்ரீத் சிங் மட்டுமல்லாமல் இயக்குநர் ஆர். ரவிகுமாரும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.
சொல்லுங்கள், யார் இப்போது படப்பிடிப்பு நடத்துகிறார்கள்? ஏனெனில் நான் படப்பிடிப்புக்குச் செல்ல மிகவும் ஆவலாக உள்ளேன் என்று ரகுல் ப்ரீத் சிங் தன்னைப் பற்றிய தவறான செய்திக்கு மறுப்பு தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குநர் ஆர். ரவிகுமார் இதுபற்றி கூறியதாவது: படப்பிடிப்பில் மிகவும் சரியாக நடந்துகொள்கிறவர்களில் ரகுல் ப்ரீத் சிங்கும் ஒருவர். வதந்திகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிட வேண்டாம். ரகுல் ப்ரீத் சிங்குடன் இணைந்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க அனைவரும் ஆவலாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.