நடிகை தமன்னாவுக்கு கரோனா பாதிப்பு: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்!
மருத்துவர்களின் கண்காணிப்புக்குப் பிறகு தற்போது மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளேன்...
பிரபல நடிகை தமன்னா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
2006-ல் கேடி படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் தமன்னா. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஆக்ஷன் படம் சமீபத்தில் வெளியானது.
நடிகை தமன்னாவின் பெற்றோர் கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் தமன்னாவும் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:
நானும் எனது படப்பிடிப்புக் குழுவினரும் பாதுகாப்பாக இருந்தும் துரதிர்ஷ்டவசமாகக் கடந்த வாரம் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனைகளின் முடிவில் எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நானாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். மருத்துவர்களின் கண்காணிப்புக்குப் பிறகு தற்போது மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளேன்.
கடந்த ஒரு வாரமாக நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டாலும் தற்போது நலமாகவே உள்ளேன். இதிலிருந்து முழுவதுமாக மீண்டுவிடுவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன். அறிவுரையின்படி தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவருடைய அன்புக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் என்றார்.